scorecardresearch

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகம் ஒருபோதும் மன்னிக்காது: மு.க ஸ்டாலின்

கருணாநிதி பெயர் அடங்கிய கல்வெட்டை சிவாஜி சிலையில் இருந்து அகற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகம் ஒருபோதும் மன்னிக்காது

DMK, MK Stalin, Actor Sivaji, CM Edappadi Palanisamy,Karunanithi, Sivaji statue,
Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)

திமுக தலைவர் கருணாநிதி பெயர் அடங்கிய கல்வெட்டை சிவாஜி சிலையில் இருந்து அகற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகம் ஒருபோதும் மன்னிக்காது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் திருக்கரத்தால் திறந்து வைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜியின் சிலை பீடத்தில் இருந்த ‘தலைவர் கருணாநிதி பெயர்’ அடங்கிய கல்வெட்டை அகற்றியிருக்கும் சட்டவிரோத அதிமுக அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும்பான்மையை உற்பத்தி செய்து, ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள குறுகிய மனப்பான்மையை இந்த அநாகரிகமான செயல் வெளிப்படுத்தியிருக்கிறது. பராசக்தியில் தலைவர் கருணாநிதிக்கும்- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் துவங்கிய பாசத்தை இது போன்ற இழிவான செயல்களால் எல்லாம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தமிழ் திரையுலகத்தினரின் மனதிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதை முதலில் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நட்பின் அடையாளமாகவும், தமிழ் திரையுலகத்தின் சாதனைகள் அகில உலகத்திற்கும் தெரிய வேண்டும் என்ற ஆர்வத்துடனும் சென்னை மெரினா கடற்கரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.

அன்றிலிருந்தே போக்குவரத்து பிரச்சினை என்ற புதிய காரணத்தை தேடிக் கண்டுபிடித்து அங்கிருந்து சிலையை அகற்ற சதி செய்து, அந்த சிலையை இரவோடு இரவாக அகற்றியிருக்கிறது அதிமுக அரசு. அப்போதே ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக அரசு நடிகர் திலகத்தின் சிலையை அகற்றியிருக்கிறது’ என்று கண்டனம் செய்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டமாக அவரது மணி மண்டபம் திறப்பு விழாவையும் இப்போது கொச்சைப்படுத்தியிருக்கிறது இந்த குதிரை பேர அரசு.

தமிழ் திரையுலக சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, தாதாசாகேப் பால்கே விருது, செவாலியர் விருது போன்ற பல்வேறு உலகப் புகழ்பெற்ற விருதுகள் அளிக்கப்பட்டு இந்திய அளவிலும், உலக நாடுகள் அளவிலும் கவுரவிக்கப்பட்டார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நடிகர் திலகத்தின் புகழை ஊசலாடிக் கொண்டிருக்கும் ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியால் ஒரு துளி கூட குறைத்து விட முடியாது என்பதை ஆட்சியிலிருப்போர் உணர வேண்டும்.

நடிகர் திலகம் என்ற இமயத்தை ஊழல் பெருச்சாளிகளால் உரசிப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் பெருமைகளுடனும், அவருடன் தலைவர் கருணாநிதிக்கு இருந்த நட்புடனும் விளையாடிப் பார்க்கும் விபரீதங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு துளியும் அழகல்ல.

தமிழ் திரை உலகத்தினரின் மனதில் மட்டுமல்ல- உலகெங்கும் உள்ள தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் குடியிருக்கும் நடிகர் திலகத்தின் மணி மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைக்காமல் அவமதிப்பு செய்ததோடு மட்டுமின்றி, அந்த சிலை பீடத்தில் இருந்த தலைவர் கருணாநிதியின் பெயரையும் நீக்கியிருப்பது இந்த அரசுக்கு உள்ள வஞ்சக நெஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.

தலைவர் கருணாநிதி நடிகர் திலகத்தின் சிலையை வைக்கும் போதே நீதிமன்றத்தில் போராடி வாதாடி அனுமதி பெற்றுத்தான் திறந்து வைத்தார். தமிழ் திரையுலகத்தில் செவாலியர் சிவாஜி நிகழ்த்திய அரும்பெரும் சாதனைகளை அனைத்துலக ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைத்தார். அதனால்தான் அந்த சிலையை அகற்ற அதிமுக அரசு முனைந்தபோது, ‘கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும்’ என்று எச்சரித்தார்.

அதையும் பொருட்படுத்தாமல் அந்த மாபெரும் கலைஞனின் சிலையை முக்கிய இடத்தில் இருந்து நள்ளிரவில் அகற்றி, அந்த விழாவையும் நயவஞ்சகத்துடன் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும், நடிகர் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவமானப்படுத்தியிருக்கும் செயல்.

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகம் ஒரு போதும் மன்னிக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karunanithis name removed from inscription of sivaji statue mk stalin condemns cm edappadi palanismay