குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வாக்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார். இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் தி.மு.க. உள்பட 17 கட்சிகள் ஆதரவு அளிக்கிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சியும் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டு வேட்பாளர்களும் தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரி இன்று சென்னை வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.,க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கோரினார். அப்போது பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முரளிதர ராவ், ராம்நாத்துக்கு ஓ.பி.எஸ்., நிபந்தனையின்றி ஆதரவு அளித்துள்ளதாக கூறினார்.
பின்னர் ஓ.பி.எஸ்., அளித்த பேட்டியில், "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு கேட்டு ராம்நாத் வந்தார். அனைவரும் ஒருமனதாக ஒருமித்த கருத்தோடு முழு ஆதரவையும் அவருக்கு தருவதாக உறுதியளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a690-300x217.jpg)
முன்னதாக, என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரங்கசாமியைச் சந்தித்து ராம்நாத் ஆதரவு கோரினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, 'பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளோம். ஆதரவு அளிப்பது தொடர்பாக எந்தவித நிபந்தனையும் அவருக்கு விதிக்கவில்லை' என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ராம்நாத் கோவிந்தும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கருணாஸ், தனியரசு ஆகியோர் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர்.
ஏற்கனவே தமீம் அன்சாரி பாஜக வேட்பாளரை புறகணித்த நிலையில் தற்போது மேலும் 2 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.