/indian-express-tamil/media/media_files/2025/10/09/vijay-video-call-2025-10-09-21-47-14.jpg)
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசல், தமிழகத்தையே உலுக்கியது. இந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அரசியல் அரங்கிலும், பொதுமக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக விஜய் வீடியோ கால் மூலம் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
விபத்து நடந்த செய்தி அறிந்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல்வேறு கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இருப்பினும், தவெக தலைவர் விஜய், சம்பவம் நடந்த அன்றிரவே தனி விமானம் மூலம் சென்னை திரும்பியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்தும், அவர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் சென்றது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
கரூர் கூட்ட நெரிசல்: விமர்சனங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் 'வீடியோ கால்'#KarurStampede#vijayvideocallpic.twitter.com/bGUHbtbWVw
— Indian Express Tamil (@IeTamil) October 9, 2025
இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் ஒரு முக்கிய நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவியும் தவெக சார்பில் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
தற்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருடன் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் உரையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த வீடியோ காலில் அவர், பாதிக்கப்பட்டோரின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.