/indian-express-tamil/media/media_files/2025/10/14/jothimani-2025-10-14-09-24-32.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காகவே இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்த வாய்ப்புள்ளது என கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி. தெரிவித்ததாவது:
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த பலரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அஸ்ரா கார்க் நேர்மையான, ஆளுமை மிக்க அதிகாரி. தற்போது உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அதை கண்காணிக்க முன்னாள் நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளனர்.
விசாரணை அமைப்புகள் பா.ஜ.கவின் அரசியல் கருவி
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் விசாரித்து ஒரு நியாயம் கூட கிடைத்ததாக தெரியவில்லை. சி.பி.ஐ விசாரணை கண்காணிப்புக் குழுவில் ஒருவராக அஸ்ரா கார்க்கும் இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் எனக்கு ஒரு சிறு நெருடல் உள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணையை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தீர்ப்பில் இல்லை. மாதம் ஒருமுறை சிபிஐ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என மட்டுமே உள்ளது. அப்படியெனில் இந்த விசாரணை முடிவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. தமிழக அரசு இந்த விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த சிபிஐ உத்தரவு ஒரு இடைக்கால உத்தரவு தான்.
த.வெ.கவுக்கு அரசியல் சவால்
பா.ஜ.க, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) நெருக்கடிக்கு உள்ளாக்க சி.பி.ஐ விசாரணையை பயன்படுத்த வாய்ப்புள்ளது. பாஜகவின் டிராக் ரெக்கார்டு அதுதான். பாஜகவின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியும் என நாம் நினைக்க முடியாது. மேலும், தவெகவும் சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை.
இதுபோன்ற சூழலில் பாசிச சக்தியை எவ்வளவு தூரம் வலிமையாக த.வெ.க எதிர்க்கிறது என்பதற்கான அரசியல் ரீதியான சவாலாக அவர்களுக்கு இது இருக்கும் என்று நினைக்கிறேன். அண்ணாமலை கூறுவதுபோல தமிழகத்தில் சி.பி.ஐ-யை வைத்து யாரும் அரசியல் செய்வதில்லை. சிபிஐயை வைத்து பாஜக தான் இந்தியா முழுவதும் அரசியல் செய்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவின் 'டீம்'. அதனால்தான் அதன் மீது எங்களுக்கு ஓர் அச்சம் உள்ளது. இவ்வாறு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.