/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-death-2025-09-29-14-29-03.jpg)
Karur rally deaths
கரூரில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த கோரமான கூட்ட நெரிசல், 41 உயிர்களைப் பலிவாங்கியதோடு, இன்னும் பல குடும்பங்களின் எதிர்காலக் கனவுகளையும் சிதைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம், இறுதிச் சடங்காக மாறியிருக்கும் இறுதிச் சடங்காக மாறியிருக்கும் சோகக் கதை இது.
கரூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, தனது கணவனை இழந்த நிலையில், சித்தாள் வேலை செய்து தனது மகன் ஆகாஷை ஒரு பொறியாளராக ஆக்கினார். ஐ.டி. ஊழியரான ஆகாஷுக்கு, அவரது காதலி கோகுலஸ்ரீயுடன் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விஜயின் தீவிர ரசிகரான ஆகாஷ், தனது வருங்கால மனைவி கோகுலஸ்ரீயையும் அழைத்துக்கொண்டு ஆர்வத்துடன் தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு ஏற்பட்ட கண்மூடித்தனமான கூட்ட நெரிசலில், காதலர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
”அவங்க ரெண்டு பேருக்கும் 24 வயசுதான்ப்பா ஆகுது. அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு மணிக்கு எல்லாம் என்கிட்ட பேசிட்டுதான்ப்பா போனாங்க. நாங்க ஓரமா, மாடியில நிக்கிறோம்னு சொன்னாங்க. ஆனா, இறங்கி வரப்போதான் என் பிள்ளையை கொன்னுட்டானுங்க... மிதிச்சே கொன்னுட்டாங்க. கூட்டமா இருக்கு, வந்துருங்க'னு நான் சொன்னேன். 'பத்திரமா நிக்கிறோம், வந்துருவோம்' அப்படின்னாங்க. ஆனா, செய்தி பார்த்துட்டுப் போனப்பதான் ரெண்டு பேருமே செத்துட்டாங்கன்னு தெரிஞ்சது," என்று கண்களில் கண்ணீர்பொங்க கூறுகிறார் ராஜேஸ்வரி.
இதை விட நெஞ்சை உருக்கும் சோகம், வீட்டில் ஆகாஷ் வளர்த்த நாய் அவன் வராததைக் கண்டு தேடுவதுதான். "இந்த நாய் அவன் இல்லன்னா சாப்பிடாது, ஒண்ணும் பண்ணாது. இன்னும் ரெண்டு நாளா அவனை தேடிட்டே இருக்கு. அவன் வரான்னு தெரிஞ்சா, அந்த வண்டி சவுண்டு கேட்டாவே நாய் வெளிய வந்து நிக்கும். இன்னமும் அவனை எதிர்பார்த்துட்டே இருக்கு அந்த நாய். அதுக்கு என்ன சொல்றதுன்னே எங்களுக்குத் தெரியல," என்று உறவினர் ஒருவர் மனமுடைந்தார்.
சம்பவத்தின்போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு அதிர்ச்சித் தகவலையும் உறவினர் வெளிப்படுத்தியுள்ளார். "அவர் (நடிகர் விஜய்) பேசத் தொடங்குன உடனே ஆம்புலன்ஸ் வந்துகிட்டே இருக்கு. எதுக்கு வந்துச்சுன்னு தெரியல. அந்த ஆம்புலன்ஸ் வந்ததுக்கு அப்புறம்தான் ரொம்ப கூட்டம் நெருக்கடி ஆயிடுச்சு. ரொம்ப தள்ளிக்கிட்டாங்க," என்று அவர் கூறியது, விபத்துக்கான காரணம் குறித்து மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Video credit: The Hindu
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.