/indian-express-tamil/media/media_files/2025/10/15/karur-stalin-assembly-2025-10-15-16-58-17.jpg)
MK Stalin in TN Assembly
சென்னை: கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் இன்று (அக்.15) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியதாகக் குறிப்பிட்ட முதல்வர், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும், அவர்களது உறவினர்களுக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
தாமதமும், நிர்வாகக் குறைபாடுகளுமே காரணம்
கரூர் பேரணிக்கு 11 நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படுவதை விட அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
துயரத்தின் மூல காரணத்தைக் குறிப்பிட்டு அவர் கூறியதாவது:
"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மதியம் 12 மணியைக் கடந்து, சுமார் 7 மணி நேரம் தாமதமாகக் கட்சித் தலைவர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இந்தக் காலதாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்குப் போதுமான குடிநீர் வசதி இல்லை. உணவு வழங்குவதற்கோ, பெண்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கவோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இதற்கு நேர்மாறாக, அதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டனர்."
காவல்துறையின் எச்சரிக்கையை மீறியதால் ஏற்பட்ட நெரிசல்
கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான உடனடி நிகழ்வுகளை விவரித்த முதல்வர், தவெக தலைவர் பயணித்த பிரசார வாகனம் காவல்துறையின் அறிவிப்புகளையும், விதிமுறைகளையும் மீறிச் சென்றதே நிலைமையை மோசமாக்கியது என்று விளக்கினார்.
"கரூர் மாவட்ட எல்லையில், காவல்துறையின் அறிவிப்பை மீறி, பிரச்சார வாகனம் தவறான பாதையில் சென்றது. அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் வந்ததால், நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததாலும், ஏராளமானோர் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்ததாலும், துணை காவல் கண்காணிப்பாளர், பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி உரையாற்றுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் அளிக்காமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு வாகனத்தை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், அவர் தவெக தலைவரைத் தனது உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த வழிமுறைகள் மீறப்பட்டு, வாகனம் முன்னோக்கிச் சென்றபோது, இருபுறமும் இருந்த கூட்டத்தினர் நிலைகுலைந்து, பல இடங்களில் அலைமோதலுக்கு உள்ளாகினர். இதனால் பெண்கள், குழந்தைகள் மத்தியில் மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து மிதிபட்டனர்."
அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள்
சம்பவம் குறித்த தகவல் அறிந்த உடனேயே, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், மருத்துவச் சிகிச்சைகளை மேற்பார்வையிடவும் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலர் உள்ளிட்டோரை உடனடியாக கரூர் அனுப்பியதாக முதல்வர் குறிப்பிட்டார்.
"இதைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் அன்றைய இரவே நான் கரூருக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தேன். சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு 200-க்கும் மேற்பட்டோருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை வசதிகள் குறைவாக இருந்ததால், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று, தடயவியல் துறைத் தலைவர் தலைமையில் 24 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, 39 பேரின் உடற்கூராய்வு விரைவாக முடிக்கப்பட்டது."
பொதுமக்கள் உயிரே முக்கியம்
ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கை அனுபவத்தைக் குறிப்பிட்ட முதல்வர், அரசியல் இயக்கங்கள் சட்டத் திட்டங்களுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது கட்சியின் தொண்டர்கள் தான். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும், அப்பாவிப் பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.
இதுபோன்ற துயரச் சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.