/indian-express-tamil/media/media_files/2025/10/29/ctr-tvk-vijay-2025-10-29-15-10-37.jpg)
Karur stampede| Vijay meeting| TVK| CTR Nirmal Kumar
சென்னை: கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்
விபத்து நடந்து சுமார் ஒரு மாதம் கழித்து, விஜய் சமீபத்தில் கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்களைச் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேரில் சந்தித்துப் பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் எந்த முக்கிய நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் நடக்காமல், த.வெ.க.வின் அரசியல் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியிருந்தன.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பனையூரில் உள்ள த.வெ.க. தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 29, 2025) காலை 10 மணிக்கு முக்கிய நிர்வாகிகள் குழுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி
நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
1. நிர்வாகக் குழுக் கூட்டத்தின் நோக்கம்:
"எங்களுடைய பொதுச்செயலாளர் அண்ணன் ஆனந்த் தலைமையிலும் இந்த முதல் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அடுத்து வர இருக்கும் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து, தேர்தல் பணிகள் குறித்தும், மற்ற இதர நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
2. கரூர் செல்ல அனுமதி மறுப்பும் உயர்நீதிமன்ற நடவடிக்கையும்:
"கடந்த வாரமே உயர்நீதிமன்றத்தில் எங்கள் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தலைவரின் பிரச்சாரத்திற்காக எங்களுக்கு அனுமதி இன்னமும் பொதுவான நிலையான இயக்க நடைமுறைகளை (Common SOP) வரையறுக்காமல் இருப்பதாக மென்ஷன் செய்திருந்தோம். அதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றத்தில் 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த (SOP) வரையறுக்கப்பட்ட பிறகு, எங்களுடைய பயணத் திட்டங்கள் மற்றும் தலைவருடைய பிரச்சாரத் திட்டங்கள் தொடரும்.
கரூர் சம்பவத்தின் முதல் நாளே, மக்களைச் சந்திக்க நானும், எங்களுடைய பொதுச்செயலாளரும் கரூருக்கு வெளியிலே காத்திருந்தோம். ஆனால், ஊருக்குள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது."
3. நிர்வாகிகளின் மீது தாக்குதல்:
"கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் வரைக்கும் நாங்கள் காத்திருந்தோம். பின்னர் அனைத்துச் சாலைகளும் தடை செய்யப்பட்டு, உள்ளே யாரும் அவ்வளவு சீக்கிரம் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கொடி கட்டிய எந்த வண்டியும் காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கு இருந்த அனைத்து நிர்வாகிகளும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்."
4. நீதி மற்றும் துயரம்:
"எங்களுடைய முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீது. எங்களுக்கு இங்கே எந்த இடத்திலும் நீதி கிடைக்காது என்பதால், உடனடியாகச் சென்னை வந்து உயர்நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று நாங்கள் முறையிட்டோம். அவர்கள் (எதிர்த் தரப்பினர்) கட்சியை முடக்கணும் என்று நினைத்தார்கள். அது கண்டிப்பாக நடக்காது. மக்கள் தலைவரின் மீது 100% நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த மொத்தச் சம்பவத்திலும் எங்களுக்கான ஒரே துக்கம், 41 பேர் எங்களுடைய சொந்தங்கள் பலியானது மட்டும்தான் மிகப்பெரிய துக்கம். அது எந்தக் காலகட்டத்திலும் மீள முடியாத துக்கம். இதைவிடப் பெரிய நெருக்கடிகளை எல்லாம் எதிர்கொள்ளவும் நாங்கள் மனத்திருத்தத்துடன் இருக்கிறோம். ஆனால், இந்த 41 பேருடைய உயிரிழப்பு மட்டும்தான் எங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது." இவ்வாறு சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டியில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us