கதிராமங்கலம் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தமிழக அரசு ஊர்மக்களை சீண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருந்தால் அதை கைவிட வேண்டும்; கச்சா எண்ணெய் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் அதில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக புதைக்கப்பட்டுள்ள குழாய்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மூடி விட்டு ஊரை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தான் அங்குள்ள மக்கள் கடந்த பல வாரங்களாக போராடி வருகின்றனர். இதற்காக அவர்களை ஊரை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு காவல்துறை சிறை வைத்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் கடந்த மாதம் 30-ம் தேதி கதிராமங்கலத்தில் எண்ணெய்க்குழாய் உடைந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை பொறுமையாக கையாண்டிருக்க வேண்டிய தமிழகக் காவல்துறை கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது. அத்துடன் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதன்பிறகு தான் கதிராமங்கலம் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி இன்று 13-வது நாளாக கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நேற்று கதிராமங்கலம் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி, ஊர்ப் பொது இடத்தில் ஒன்று கூறி சமைத்து உண்ணும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கதிராமங்கலம்வாசிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் இன்னும் இரக்கம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரையும், அடக்குமுறையையும் தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை ஒருபோதும் சகிக்க முடியாது.
கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இதுதான் தமிழக அரசின் உண்மையான நிலைப்பாடு என்றால் அதற்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாகத் தானே தமிழக அரசு செயல்பட வேண்டும்? மாறாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஏன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்னும் ஒருபடி மேலே போய், கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதினால், அதை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக இருந்தால் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கதிராமங்கலம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்க வேண்டாமா? அதை செய்ய முடியாவிட்டால் யாருக்காக இந்த பினாமி அரசு செயல்படுகிறது?
கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசோ அவர்களை குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நோக்குடன் அடுத்தடுத்து பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் பிணை மனுக்கள் நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் தயாராக இருந்தது. ஆனால், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் காவலர்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும், அந்தக் காவலர்கள் இன்னும் குணமடையாததால் அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியதால் அவர்களின் பிணை தாமதமாகிறது.
தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடும் கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்து பழிவாங்குவது தேவையற்றது. இந்த குரூரமான அணுகுமுறையைக் கைவிட்டு, கதிராமங்கலம் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மக்களுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.