கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மற்றும் நாகையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிலாமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணற்றின் மூலம் கச்சா எண்ணெய் எடுத்து வரும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 30-ம் தேதி எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, அப்பகுதியில் கச்சா எண்ணெய் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தின் போது கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக போலீஸார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குவரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் வணிகர்கள் அறிவித்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.முக., பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பழ.நெடுமாறன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்தனர். மேலும், இந்த போராட்டதிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும் வகுப்புகளை புறக்கணத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும் தங்களது வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில், இன்று 11-வது நாளாக போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கடந்த 7-ம் தேதி கதிராமங்கலம் வந்து மக்களையும், வணிகர்களையும் சந்தித்தார். இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்திருந்தனர்.
அதன் படி, தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, திருவிடை மருதூர், திருப்பனந்தாள், திருபுவனம், பந்த நல்லூர், அணைக்கரை, நரங்கன் பேட்டை, திருவலாங்காடு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
இதனால், கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளனது.