Advertisment

அதிகாரிகளை கலங்கடிக்கும் கதிராமங்கலம் போராட்டக்காரர்கள்; கோட்டையில் போலீஸ் குவிப்பு!

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னையில் கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-ல் நேற்று காலை முதலே தகவல் வேகமாக பரவியது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிகாரிகளை கலங்கடிக்கும் கதிராமங்கலம் போராட்டக்காரர்கள்; கோட்டையில் போலீஸ் குவிப்பு!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி, போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது.

Advertisment

இந்த நிலையில், கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்து வெளியேறிய எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், எரிபொருள் குழாய் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைதியான முறையில் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

இதனால், அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, கதிராமங்கலத்தில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பழுதடைந்த எரிவாயு குழாயை சரி செய்வதற்காக ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் சென்னையில் கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நேற்று காலை முதலே தகவல் வேகமாக பரவியது. போராட்டக்காரர்கள் 4 பிரிவாக பிரிந்து சென்னை தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை, தமிழக பா.ஜ.க அலுவலகம், மெரினா கடற்கரை என 4 இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தகவல் வெளியானது.

இதனால் அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமைச் செயலகத்தின் 2 நுழைவுவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்கள் எந்த வழியிலும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து விடாதபடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டம் போல், போராட்டக்காரர்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கூடி விடாதபடி போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடற்கரைக்கு வந்த வாகனங்களை போலீசார் முழு சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். போராட்டக்காரர்கள் வந்தால் அவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், கிண்டி கவர்னர் மாளிகை அருகில் ஏராளமான போலீஸ் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

போராட்டக்காரர்கள் எப்போது வருவார்கள்? எங்கிருந்து வருவார்கள்? என்று போலீசார் திணறிய நிலையில்,  நேற்று இரவு 7 மணியை கடந்தும் யாரும் வரவில்லை. இருப்பினும், போராட்டக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள் என்ற அச்சத்தால் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக போராட்டக்காரர்கள் சென்னையில் போராட்டம் நடத்த வருவதாக தகவல் கிடைத்து இருக்கிறது. அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்’ என்று எச்சரித்துள்ளனர்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment