கீழடியில் அருங்காட்சியகம் மையம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில், தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள்களை, மைசூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்த மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் கனிமொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கு தொடர்ந்திருந்தார்.
அவர் அந்த மனுவில், 2 ஆண்டுகளாக மத்திய தொல்லியல் துறையின் சார்பில் கீழடி கிராமத்தில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே வைக்க ஏதுவாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என அந்தமனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நடைபெற்ற நிலையில், கீழடி அகழ்வாராய்சின் போது கிடைத்த பொருட்களை மைசூர் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகளிடம் தமிழக அரசின் சார்பிலும், தொல்லியல்துறை சார்பிலும் பதிலளிக்கப்பட்டது.
அப்போது அகழ்வாராய்ச்சி அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், தொல்லியல் துறை சார்பிலும் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.