கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த தமிழர் முருகனின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி அண்மையில் படுகாயமடைந்தார். அவரது உயிரிழப்புக்கு அம்மாநில மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்காததே காரணம் என புகார் எழுந்தது. முருகனின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் நிர்கதியாக நின்றனர்.
முருகனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்துக்கு அவரது சடலத்தை கொண்டு வரக் கூட முடியாமல் தவித்த அவரது மனைவிக்கு, அம்மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் உதவியது.
இந்நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், முருகனின் உயிரிழப்புக்கு கேரள மக்கள் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், முருகனின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து உதவி கோரி மனு அளித்தனர். அப்போது, முருகனின் குழந்தைகளை பார்த்து மனம் உருகிய முதல்வர் பினராயி விஜயன், உங்களுக்கு எந்த சமயத்திலும் கேரள அரசு உதவியாக இருக்கும் என அறுதல் கூறினார்.
மேலும், முருகனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்த முதல்வர் பினராயி, இந்த தொகை முருகனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் வைக்கப்படும். முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவு உள்பட குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
அதேபோல், முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.