Advertisment

ரஜினியிடம் கெஞ்சுவதா? ட்விட்டரில் மோதிய தமிழிசை, குஷ்பு

உங்களைப் போன்ற ஒருவர் வதந்திகளையும், மீடியாக்கள் பேசுவதையும் நம்புவது வருத்தமாக உள்ளது...

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினியிடம் கெஞ்சுவதா? ட்விட்டரில் மோதிய தமிழிசை, குஷ்பு

அரசியல் தலைவர்கள் அறிக்கை போர் நடத்துவார்கள். அல்லது பொது மேடைகளில் மோதிக் கொள்வார்கள். இது டிஜிட்டல் யுகம் என்பதால் ட்விட்டரில் மோதிக் கொள்கிறார்கள்.

Advertisment

ரஜினிகாந்த் பிஜேபியில் சேர வேண்டும் என்று மாநில தலைவரில் இருந்து தேசிய தலைவர்கள் வரை விரும்புகிறார்கள். அழைப்புவிடுக்கிறார்கள். இது பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தனது ட்விட்டரில், 'தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையைப் படித்தேன். ஒருவர், கட்சியின் கொள்கையைப் பார்த்து, தங்களது சொந்த விருப்பத்தின் பெயரில் அதில் சேரவேண்டும். ஆனால், நீங்கள் ரஜினிகாந்த்திடம் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்' என்ற ட்வீட் செய்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "நல்ல மனிதர்களை கட்சிக்குள் கொண்டுவர முயற்சிப்பதற்கு பெயர் கெஞ்சுவது இல்லை. உங்கள் வார்த்தையில் இருந்தே உங்கள் மனம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. கட்சியில் சேருவதா? கட்சிக்கு தாவுவதா? என்ற உங்கள் சித்தாந்தம் எனக்கு புரிகிறது" என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து ட்வீட் செய்த குஷ்பூ, 'என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் காங்கிரஸில் இணைந்தேன் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், "தங்களை சேர்க்க காங்கிரசிலிருந்து தூதர்கள் வரவில்லை. ஆனால், தங்களை திமுகவிலிருந்து துரத்துபவர்கள் இருந்தார்களே" என்றார். மேலும், "நீங்கள் காங்கிரஸில் சேர்ந்தீர்களா... அல்லது தாவினீர்களா? தி.மு.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்ததா சிறந்த கொள்கை?" என்ற அவர், "ஆனால் எந்தக் கொள்கையின் அடிப்படையில் சேர்ந்தீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றும் சொல்லியிருந்தார்.

இதற்கு குஷ்பு, "நான் தி.மு.க-விலிருந்து விலகி ஆறு மாதங்களுக்குப் பிறகுதான், அகில இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தேன். நான், தி.மு.க-விலிருந்து ஏன் விலகினேன் என்று தெரிந்திருக்க, நீங்கள் என் உதவியாளரும் இல்லை மக்கள் தொடர்பாளரும் இல்லை. உங்களைப் போன்ற ஒருவர் வதந்திகளையும், மீடியாக்கள் பேசுவதையும் நம்புவது வருத்தமாக உள்ளது" என்றார்.

அதோடு,  ’’மற்றவர்கள் எண்ணத்தை தெரிந்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் பெரிய ஆளா? உங்கள் நினைப்பை விட மேலானது எனது எண்ணம். ஆமா, நீங்க மனநல மருத்துவரா? பொது மருத்துவரா?’’ என்று மீண்டும் கிடுக்கிப்படி போட்டார்.

அதற்கும் அசராமல் பதிலடி கொடுத்தார், ‘நான் ஒரு டாக்டர் என்ற முறையில் அடுத்தவர் மூளையை ‘ஸ்கேன்’ செய்து என்னால் அறியமுடியும்’ என்றார்.

ட்விட்டர் மோதல் உச்சத்தை அடைந்த போது, விவரம் புரிந்த ஒரு வாசகர் ’’ 2014-ல் நீங்கள் தி.மு.க.வில் இருந்து வெளியே வந்ததும் உங்களுக்கும் இப்படி அழைப்பு விடுக்கத்தானே செய்தார்கள்? தமிழிசை கூட அழைப்பு விடுத்திருந்தாரே! அப்போதெல்லாம் நீங்கள் இப்படி பேசவில்லையே’’ என்று சொல்ல,  ’’நான் ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற ரீதியில் தமிழிசையை மதிக்கிறேன். ஒரு பெண் தலைவர் என்பதையும் மறுக்கவில்லை. இன்னொரு கோணத்தில் எனது கருத்தையும் சொல்கிறேன்’’ என்று சொல்லி, மோதலை முடித்துக் கொண்டார்.

ட்விட்டரில் இருவரும் மோதிக் கொண்டது, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Twitter Khushboo Tamilisai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment