பாஜக.வில் எந்தப் பணியை கொடுத்தாலும் செய்வேன்: குஷ்பூ Exclusive

டெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு.

Khushbu Sundar interview, Khushbu Sundar on 2021 election
நடிகை குஷ்பு

இயல்பாகவே பெண்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் மிக லாவகமாக பேலன்ஸ் செய்யக் கூடியவர்கள். குடும்பம், குழந்தைகள், அலுவலகம்,  தனிப்பட்ட வேலைகள் என எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எதையும் சிந்தாமல், சிதறாமல் செய்யக் கூடிய திறமை அவர்களுக்கு உண்டு. அந்த வகையில், குடும்பம், திரை வாழ்க்கை, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்புவின் டைம் மேனேஜ்மெண்ட் நம்மை வியக்க வைக்கிறது. காரணம், 2 பெண் குழந்தைகளுக்கு தாயாக தனக்கு இருக்கும் பொறுப்புகளை செய்து முடிக்கும் அதே வேளையில், கட்சி சம்பந்தமான பணிகளிலும் ஈடுபடுகிறார். மறுபுறம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். சின்னத்திரை தயாரிப்பு, நடிப்பு என பரபரப்பாக அதே சமயம் பதற்றமில்லாமல் அனைத்தையும் கையாள்கிறார். அவரிடம் பேசினோம்…

உங்களின் நேர மேலாண்மையைப் பற்றி?

குழந்தைங்க பிறந்ததுக்கு அப்புறம் நான் படங்கள்ல நடிக்கிறத ஏறக்குறைய நிறுத்திட்டேன். இந்த 20 வருஷத்துல அதிகபட்சமா 5 படங்கள் பண்ணிருப்பேன், 10 படம் கூட கிடையாது. இப்போ வரைக்கும் ஞாயிற்றுக் கிழமை படபிடிப்புல கலந்துக்க மாட்டேன். ஒரு லாங் ஷெட்யூல் அவுட் டோர்ல இருக்குன்னு, நிறைய தமிழ் மற்றும் தெலுங்குல, பெரிய படங்களோட வாய்ப்பை மறுத்துருக்கேன். சின்னத்திரையைப் பொறுத்த வரைக்கும் எல்லாமே என்னோட தயாரிப்பு. பசங்க 2 பேரையும், குளிப்பாட்டி, தலை பின்னி ரெடி பண்ணி நான் தான் ஸ்கூல்ல விடுவேன். அதுக்கு அப்புறம் 10 மணிக்கு ஷூட்டிங் போவேன். அதுக்காக வீட்ல வேலைக்காரங்க எல்லாம் இல்ல. ஒரு அம்மாவா அவங்களோட தேவைகளை பூர்த்தி பண்றது தான் முக்கியம். 6 மணிக்கு மேல ஷூட்டிங்ல கலந்துக்க மாட்டேன். வீட்டுக்கு வந்து பசங்களோட ஹோம் ஒர்க்க செக் பண்ணிட்டு, அவங்க கூட விளையாடுவேன். படபிடிப்பும் மாசத்துல 10-12 நாட்கள் தான். மத்தபடி அவங்கள ஸ்கூல்ல விடுறது, கூட்டிட்டு வர்றது. மதியம் சாப்பாடு எடுத்துட்டு போறதுன்னு பசங்க கூட எவ்ளோ நேரம் செலவிட முடியுமோ, அவ்ளோவையும் பண்ணிடுவேன். ஒவ்வொரு பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்லயும் நான் இருந்திருக்கேன்.

Khushbu Sundar Interview
குடும்பத்துடன் குஷ்பு…

குடும்பத்தினரின் சப்போர்ட்? உங்கள் கணவர் சுந்தர்.சி பற்றி?

குடும்பத்தோட சப்போர்ட் நிறையவே இருக்கு. என் கணவரோட சப்போர்ட் இல்லன்னா எதுவுமே பண்ண முடியாது. இதுவரைக்கும் எதையுமே பண்ணக் கூடாதுன்னு அவர் என்கிட்ட சொன்னதில்ல. நான் எதாச்சும் ஒரு முடிவெடுத்தா அத பத்தி நிச்சயமா அவர் கிட்ட விவாதிப்பேன். அவர் அவரோட கருத்தை சொல்வாரு, ஆனா நீ இத தான் பண்ணனும்ன்னு என் கிட்ட சொல்ல மாட்டாரு. குறிப்பா அவரோட கருத்தை என் மேல திணிக்க மாட்டாரு. அதுவே பெரிய சப்போர்ட். எனக்கு வேலை செய்யப் பிடிக்கும். அதனால தயாரிப்பு வேலை முழுவதையும் என் கிட்ட விட்டுருவாரு. நான் நல்லா மேனேஜ் பண்ணுவேன்னு அவருக்கு நல்லா தெரியும்.

சமூக வலைதள ட்ரோல்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

ஊர், பேர், முகம் இல்லாதவங்க தான் சோஷியல் மீடியாவுல ட்ரோல் பண்றாங்க. ஸோ அவங்களே ஒரு பயந்தாங்கொள்ளிங்க. வளர்ப்புல தவறு இருக்கவங்க தான் இப்படி செய்வாங்க. உண்மையான அடையாளம் இல்லாதவங்க பண்றதுக்கு நான் ஏன் ரியாக்ட் பண்ணனும்?

பாஜக-வில் வரவேற்பு எப்படி இருந்தது?

நல்ல வரவேற்பு இருந்தது. யாருமே இதை எதிர்பார்க்கல. டெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு. அத பத்தி எந்த குறையும் இல்ல.

2021 தேர்தலில் பாஜக சார்பாக உங்களின் பங்கு?

என்ன ரோல் தர்றாங்கன்னு இதுவரைக்கும் சொல்லல. நம்ம கட்சிக்காக வேலை செய்றோம். கட்சியை பலப்படுத்த வேலை செய்றோம். எனக்குன்னு என்ன ரோல் குடுத்தாலும் அத சிறப்பா செய்வேன்.

தேர்தலில் போட்டியிடும் ஐடியா இருக்கிறதா?

Khushbu Sundar Interview
குஷ்பு சுந்தர்

ஒவ்வொரு தேர்தல்லயும் இந்த கேள்வி வரும். சீட் குடுக்கட்டும், அதுக்கப்புறம் இத பத்தி பேசலாம்.

உங்கள் அழகு ரகசியம்?

நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். பார்லர் போய் கண்ட கண்டதெல்லாம் ஸ்கின் அண்ட் ஹேர்ல போடுறது இல்ல. ஃபேஷியல் பண்றது இல்ல. அம்மா, பாட்டி என்ன பண்ணாங்களோ அத தான் நானும் பண்றேன்.

ஸ்கின் கேர் ருட்டீன்?

நான் வழக்கமா கடலை மாவு பயன்படுத்துவேன். அதுல பாலாடை, தேன், குங்கும பூ, பால், ரோஸ் வாட்டர், கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்துக்கும், உடம்புக்கும் போடுவேன். சோப் பயன்படுத்தினாலும், இரண்டு நாளைக்கு ஒருமுறை இதை தான் செய்வேன்.

லாக் டவுனில் என்ன செய்தீர்கள்?

வீட்ல வேலைக்காரங்க யாருமே இல்ல. ஸோ முழுக்க முழுக்க வீட்டு வேலை செஞ்சேன். துடைக்கிறது, பெருக்குறது, பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறதுன்னு எல்லாமே பண்ணேன், கூடவே சமையலும். சாயங்காலம் வாக்கிங், காலைல யோகா கூடவே வீட்டு வேலை செஞ்சதால 7 கிலோ எடையும் குறைஞ்சது!

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Khushbu sundar interview bjp member khushbu beauty secret

Next Story
ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா; விடுதலை எப்போது?sasikala vk sasikala release date jail, sasikala political plan, சசிகலா அரசியல் திட்டம், sasikala letter to advocate raja senthoor pandian
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com