/indian-express-tamil/media/media_files/2025/10/19/brts-integrated-elevated-corridor-proposed-on-gst-road-2025-10-19-14-40-14.jpg)
Tamilnadu's First BRTS integrated elevated corridor proposed on GST Road
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (GST சாலை) தென் மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாகச் செயல்படும் நிலையில், இங்கு நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மிக பிரம்மாண்டமான திட்டத்தை முன்மொழிந்துள்ளது.தமிழ்நாட்டின் முதல் பி.டி.ஆர்.எஸ். (Bus Rapid Transit System) வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த மேம்பாலமாக இது அமையவுள்ளது.
கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரை
ரூ. 3300 கோடி செலவில் அமையவுள்ள இந்த உயர்மட்டப் பாலம், கிளாம்பாக்கம் முனையத்தில் (ஊரப்பாக்கம்) தொடங்கி 18.4 கி.மீ தூரம் பயணித்து மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (செட்டிப்புண்ணியம்) வரை நீளும்.
மத்திய அரசின் ஆய்வுக்குப் பின், மேம்பாலத்தின் அகலம் 25 மீட்டரில் இருந்து 29 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கூடுதலாக இருபுறமும் லேன்களைக் கொண்டிருக்கும். இந்த கூடுதல் லேன்கள் அவசர காலங்களில் வாகனங்களை ஓரமாக நகர்த்தி, போக்குவரத்தை சீராகப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும்.
இந்தக் கூடுதல் லேன்கள்தான் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்புக்கான (BRTS) தனிப் பாதையாகவும் செயல்படும்.
பேருந்துப் பயணிகள் மேம்பாலத்திற்குச் செல்ல வசதியாக, ஒவ்வொரு 2 கி.மீ. இடைவெளியிலும் லிஃப்ட் வசதி (Elevators) அமைக்கப்பட உள்ளதாக (NHAI) அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பும் ஒருங்கிணைப்பும்!
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம், இப்பகுதியில் உள்ள 14 "பிளாக்ஸ்பாட்களில்" (Blackspots) விபத்துகளைக் குறைக்கும். உள்ளூர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்து தனித்தனியே பிரிக்கப்படும். இதனால் பண்டிகை கால நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாலம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமையவுள்ள சென்னை புறநகர் வளையச் சாலையுடனும் (Chennai Peripheral Ring Road) இணைக்கப்படும். ஐயஞ்சேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் சந்திப்புகளிலும் ஏறும்/இறங்கும் வழிகள் (Entry/Exit Ramps) வழங்கப்படும்.
மதுரையில் உள்ள 7.3 கி.மீ. நீள செட்டிக்குளம் மேம்பாலத்தைப் போல, இதுவும் ஸ்டீல் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்படும். கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன், குறுக்கிடும் ஐந்து உயர் அழுத்த மின் இணைப்புகள் (HT Power Lines) அகற்றப்பட உள்ளன.
முன்னதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் (CMRL) இந்தத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட இருந்தது. ஆனால், பொருளாதார ரீதியாகச் சாத்தியமில்லை எனக் கருதி, அவர்கள் தனியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மேம்பாலம் நடப்பு நிதியாண்டிலேயே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.