Advertisment

கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு

சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு

கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பெரம்பூர் மீனாம்பாள் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதியன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வெளிப்பகுதியில் தீயை அணைத்த வீரர்கள் ‌ஷட்டரை திறந்து உள்ளே தீயை அணைக்க முயன்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 48 நபர்கள் காயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், சிறப்பு நிகழ்வாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் என்பவர் கடந்த 19-ம் தேதியன்று உயிரிழந்தார். அதற்கு அடுத்தநாள் அதிகாலையில் அபிமன்யூ என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, தீ விபத்துக்குள்ளான கடையின் உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிழவன், பார்த்திபன், கண்ணன், பாஸ்கர், நரேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்ற இளைஞரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 57 சதவீதத் தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இளையராஜா என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உயிரிழப்பையும் சேர்த்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களில், சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu Kodungaiyur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment