"நீதிமன்ற அவமதிப்பு" தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி எஸ் கர்ணனை கைது செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கொல்கத்தா போலீஸ் குழு நேற்று (புதன்கிழமை) சென்னை வந்தடைந்தது. பின், சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில் நகரமான காளஹஸ்திக்கு, நேற்று மாலை கொல்கத்தா போலீஸ் கிளம்பி சென்றுவிட்டதாக சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து, கடந்த செவ்வாயன்று சென்னை திரும்பிய கர்ணன், சேப்பாக்கத்தில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து, புதன்கிழமை விடியற்காலையிலேயே கிளம்பிவிட்டார்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், 'நீதிபதி கர்ணன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால், அவர் காளஹஸ்திக்கு தான் சென்றார் என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை' என்றனர்.
சென்னை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீதிபதி கர்ணனை காவலில் எடுக்க, காவல்துறை பொது இயக்குனர் தலைமையில் 5 கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள், புதன்கிழமை காலை சென்னை வந்தனர். கர்ணன் எங்கிருக்கிறார் என்பது குறித்து அவர்களிடம் தடயம் உள்ளதாக எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவர்களுக்கு தளவாடங்கள் அமைத்துக் கொடுத்தோம். பின் அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்யும் நடைமுறைகள் குறித்து, தமிழக உயர்காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்" என்றார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், அவரை கைது செய்ய முடியாமல் கொல்கத்தா போலீஸ் திணறி வருகிறது. எனவே, தமிழக மற்றும் ஆந்திர போலீசாரின் உதவியை கொல்கத்தா போலீஸ் நாடியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தனது கைது குறித்து, நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.