கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி நள்ளிரவில் போலீஸாரால் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணு உலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உலைகளை எதிர்த்து இடிந்தகரையில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பெரும்பாலான வழக்குகளை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதை உள்ளூர் போலீஸார் கடைபிடிக்கவில்லை என்கிற புகார் போராட்டக் காரர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்த வழக்குகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. போராட்டக் காரர்கள் சார்பில் இந்த வழக்குகளை வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி என்கிற ராஜரத்தினம் நடத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் நேற்று (3-ம் தேதி) நள்ளிரவில் வழக்கறிஞர் செம்மணியை அவரது வீட்டில் இருந்து போலீஸார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் கூறியதாவது :
கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தும் வள்ளியூர் வழக்கறிஞர் ராஜரத்தினம் (எ) செம்மணியை திருநெல்வேலி மாவட்டம், மாறன்குளத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் பத்து போலீசார் அடித்து இழுத்துச் செல்வதாக அவரது மனைவி தெரிவிக்கிறார். சீருடையணிந்த பத்து போலீசார் வீட்டுக்குள் புகுந்து, அவரை தரதரவென இழுத்துச்சென்று குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் போட்டு "வள்ளியூர் டி.எஸ்.பி.யைப் பார்க்க வா" என்று கடத்திச் சென்றார்களாம். அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.
பழவூர் காவல் நிலையத்துடன் நான் பேசினேன். அங்கே அழைத்துச் செல்லவில்லையாம். வள்ளியூர் காவல் நிலையத்துக்கும் கொண்டு செல்லவில்லையாம். வள்ளியூர் டி.எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் இங்கே யாரையும் அழைத்து வரமாட்டோம் என்கிறார்கள். திருநெல்வேலி டி.ஐ.ஜி.யிடம் பேசினேன். அவர் விசாரிக்கிறேன் என்று வாக்களித்தார். அவருக்கும் எதுவும் தெரியவில்லை. அப்படியானால் வழக்கறிஞர் செம்மணி எங்கே? தங்கள் மண்ணைக் காக்க போராடும் மக்களுக்கு துணை நிற்கும் ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலையா?’ என கொந்தளிப்பாக கேட்டார் சுப.உதயகுமாரன்.
இதற்கிடையே செம்மணி என்கிற ராஜரத்தினத்தை திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரிப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட ஆலோசனை மைய நிறுவனரான வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத் கூறுகையில், “நள்ளிரவில் செம்மணியை பிடித்துச் செல்ல வந்த போலீஸார், அவரது மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அவர் இப்போது சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
செம்மணியை போலீஸார் பிடித்துச் சென்றிருப்பது, முழுக்க பழிவாங்கும் நடவடிக்கைதான். வள்ளியூர் டி.எஸ்.பி., உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நேற்று வள்ளியூர் நீதிமன்றத்தில் செம்மணி ஒரு வழக்கு தொடர்ந்தார். அன்று இரவே போலீஸார் இந்த அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
தவிர, கடந்த 2008-ம் ஆண்டு செம்மணியின் நெருங்கிய உறவினரான சித்த வைத்தியர் ஒருவர், நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் போலீஸாரின் டார்ச்சரால் கொல்லப்பட்டார். அது தொடர்பாக நான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணை பெற்றேன்.
அதில் சிபிஐ பரிந்துரை அடிப்படையில், 11 போலீஸார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தில் நியாயத்திற்காக போராடிய செம்மணி உள்ளிட்டவர்கள் மீதும், அதில் சாட்சி சொன்னவர்களையும் வழக்குகளில் சிக்க வைத்து, ரவுடிகள் லிஸ்டில் சேர்க்கும் வேலையை போலீஸார் செய்கிறார்கள். செம்மணி மீதும் அப்படியொரு பொய்வழக்கு போடும் திட்டத்துடன்தான் கடத்தியிருப்பதாக தெரிகிறது. உயர் அதிகாரிகள் இதில் உடனே தலையிட வேண்டும்’ என்றார் வழக்கறிஞர் கிரினிவாசபிரசாத்.
இதுகுறித்து 'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
"வன்மையாகக் கண்டிக்கிறோம்
--------------------------------------------------
கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தும் வள்ளியூர் வழக்கறிஞர் ராஜரத்தினம் (எ) செம்மணி அவர்களை திருநெல்வேலி மாவட்டம், மாறன்குளத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் பத்து காவல்துறையினர் அடித்து இழுத்துச்சென்றுள்ளனர். அவருடைய கை உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்களுக்காக போராடிவரும் ஒரு வழக்கறிஞர் அவர். அவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?
கூடங்குளம் அணுஉலைகளுக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது, உலகத்திலேயே அதிகமான தேச துரோக வழக்குகளை போட்டுள்ளது நெல்லை மாவட்ட காவல் துறை.
அப்படி தவறான காரணங்களுக்காக "கின்னஸ் சாதனை" வாங்க தகுதியுடைய நெல்லை மாவட்ட காவல் துறையினரின் இன்னொரு அராஜக அரங்கேற்றம் தான் தோழர். செம்மணி மீது நடைபெற்றுள்ள தாக்குதல்.
மனித தன்மையற்ற, கொஞ்சமும் மனிதஉரிமைகளை மதிக்காத செயலில் ஈடுபட்ட நெல்லை மாவட்ட காவல் துறையை மிகவும் கடுமையாக கண்டிக்கின்றோம். தகாத செயலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசை வலியுறுத்திக்கிறோம்.
செம்மணிக்காக அனைத்து அமைப்புகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.", என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.