Advertisment

அணிகள் இணையுமா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.பி.முனுசாமி கண்டனம்

அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்துக்கு பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கடும் கண்டனம்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
முக்கிய செய்திகள் : சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லை - கே.பி. முனுசாமி

அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்துக்கு பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிளவு கண்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதும் சசிகலா சிறை சென்றார். கட்சி தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனிடையே, ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலும் ரத்தானது.

இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமி அணி உருவானது. இந்த அணிகளை இணைப்பதற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. ஆனால், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என பன்னீர்செல்வம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில், கட்சி நடவடிக்கைகளில் இருந்து தினகரன் ஓரங்கட்டப்படுவதாக, முதல்வர் பழனிசாமி அணியினர் அறிவித்தனர். அதற்கு ஏற்றாற்போல், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

அந்த சமயத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு டெல்லி சிறையில் தினகரன் அடைக்கப்பட்டார். எனினும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னீர்செல்வம் அணியினர் வைத்தனர். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியது. மேலும், பேச்சுவார்த்தைக்கு இரு அணிகள் சார்பிலும் குழு அமைக்கப்பட்டதாக தகவல் வெளியானதே தவிர, பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரியவில்லை. தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவு கண்டுள்ள நிலையில், அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதில், ஓபிஎஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டாலும் அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,"அதிமுக அம்மா அணியுடன் நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். இது தவறு. அவர் இவ்வாறு பேசுவதை கண்டிக்கிறோம். தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த அதுபோன்ற கருத்துகளை அவர் கூறி வருகிறார்" என பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரு அணியை சேர்ந்தவர்களும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதால், அதிமுக அணிகள் இணையுமா, இணையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Ops Minister Jayakumar Kp Munusamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment