scorecardresearch

இப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு

அமமுக என்ற கட்சிக்கு ஆயுள் மிகவும் சொற்பம் என்பதே எனது தீர்க்கமான கருத்து. இதனை தீர்க்கதரிசனமாக எடுத்துக்கொண்டாலும் சரி

Krishnapriya about admk, sasikala, jayalalitha, dmk, mk stalin, kanimozhi - ஸ்டாலினுக்கு கனிமொழி பெஸ்ட், திமுகவுக்கே வாய்ப்பு, அப்போலோ ரகசியம்! - மனம் திறக்கும் கிருஷ்ணபிரியா
Krishnapriya about admk, sasikala, jayalalitha, dmk, mk stalin, kanimozhi – ஸ்டாலினுக்கு கனிமொழி பெஸ்ட், திமுகவுக்கே வாய்ப்பு, அப்போலோ ரகசியம்! – மனம் திறக்கும் கிருஷ்ணபிரியா

சசிகலாவைப் போல் ஜெயலலிதாவோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக விளங்கியவர் இளவரசி. சசிகலாவுடன் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். இவரது மகள் கிருஷ்ணப்ரியா. தான் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம், எளிய மக்களையும் சந்தித்து சமூக பணியாற்றி வரும் கிருஷ்ணபிரியா, அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் நுனிவிரலில் வைத்திருப்பவர். ஆனால், வழக்கமான அரசியல் பார்வையைத் தவிர்த்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிரிக் கட்சியாக இருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன் வைக்கும் கிருஷ்ணபிரியாவிடம் நடத்திய ஒரு சிறிய நேர்காணல் இதோ,

1. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறு வயதில் இருந்து நீங்களும் நெருக்கமாக இருந்துள்ளீர்கள்.  ஜெயலலிதா அவர்களின் குணம் குறித்து இதுவரை மக்கள் அறியாத தகவல் (அ) சம்பவம் ஏதாவது சொல்லுங்களேன்!

அம்மா அவர்களை கடினமானவராகவே பலரும் அறிவர். வெளி உலகிற்கு அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இல்லையென்றால் ஆணாதிக்க சமுதாயத்தில் என்றோ அவர் நசுக்கப்பட்டிருப்பார். தனிப்பட்ட முறையில் அவரை நன்கு அறிந்ததனாலேயே சொல்கிறேன். அம்மா அவர்கள் இரக்க சுபாவமும், வெள்ளை உள்ளமும், குழந்தைத்தன்மையும் நிறைந்தவர். அவருடன் கேரம் போர்டு, செஸ் விளையாடிய நாட்களும், சிகை அலங்காரம் செய்த நாட்களும், எனது வளைகாப்பிற்கு அம்மா அவர்கள் பாடிய “என்ன தவம் செய்தனை” என்ற பாடலும், இதுபோன்ற இன்னும் எத்தனையோ சம்பவங்களும், நினைவுகளும் என் உயிருள்ள வரையில் என் சிந்தையை விட்டு அகலாது.

2. தன் குடும்பத்தையே விடுத்து, ஜெயலலிதா மீது சசிகலா அவ்வளவு அன்பு வைக்க என்ன காரணம்?

அம்மா அவர்களையும் தமது சக குடும்ப உறுப்பினராக பார்த்தவர்தான் திருமதி.சசிகலா.

3. லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்கள் நேசிக்கும் ஒரு மாபெரும் தலைவரான ஜெயலலிதாவிற்கு அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அங்கு (சிகிச்சை உட்பட) எல்லாம் சரியாக நடந்தது என்று நினைக்கிறீர்களா?

அம்மா அவர்களுக்கு அப்போலோ மருத்துவர்கள் மாத்திரம் சிகிச்சை அளிக்கவில்லையே. மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். அம்மா அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று அனைவரும் போராடினார்கள் என்பதே எனது பார்வை.

4. சசிகலா அவர்களை சமீபத்தில் எப்போது சந்தித்தீர்கள்? அவர் இப்போது நலமுடன் இருக்கிறாரா?

பதில் இல்லை

5. தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து சசிகலா என்ன நினைக்கிறார்? அவரது கருத்து என்ன?

அதிமுகவை மீட்டெடுக்கவேண்டும் என்பதே அவரது எண்ணம்.

6. டிடிவி தினகரன் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்…?

“தீயசக்தி”

7. அமமுக எதிர்காலம் பற்றி உங்கள் கருத்து என்ன? கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களவை தேர்தலில் அவர்களுக்கு வெற்றி கிட்டுமா?

அமமுக என்ற கட்சிக்கு ஆயுள் மிகவும் சொற்பம் என்பதே எனது தீர்க்கமான கருத்து. இதனை தீர்க்கதரிசனமாக எடுத்துக்கொண்டாலும் சரி. பொறுத்திருந்து பாருங்களேன்!

8. ஆளும் அதிமுக அரசு பற்றிய உங்கள் கருத்து? மக்களவை தேர்தலிலும், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அவர்களது நிலைமை என்னவாக இருக்கும்?

அதிமுகவின் திடீர் முதலமைச்சர்கள் “அம்மாவின் ஆட்சி” என்று சொல்வதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டுமே என்பதனை நீட் விவகாரத்தில் பார்த்துவிட்டோம், விவசாயிகளின் வாழ்வாதார போராட்ட பிரச்சனைகளில் பார்த்துவிட்டோம், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படும்போது மத்திய அரசிடம் கைகட்டி வாய்பொத்தி போவதை பார்த்துவிட்டோம். இதனை, மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அம்மா அவர்களின் ஆட்சி என்று சொல்லிக்கொள்வது வேதனையான வேடிக்கை. மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு சாதகமான வாக்குகள் அதிகம். மற்ற பெருவாரியான இடங்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கலாம் என்பதே எனது கருத்து. சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் நிலைமை மாறிவிடும், எனது கருத்தை அப்போது சொல்கிறேன்.

9. எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து உங்கள் கருத்து என்ன? அவர் முதல்வராக வர வேண்டும் என எண்ணுகிறீர்களா?

சிறு வயது முதல் திமுகவை எதிர்துருவமாக பார்த்து வளர்ந்தவள் நான். வளர்க்கப்பட்டேன் என்றும் கூறலாம். அவ்வாறு இருக்க, திரு.ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என்ற எண்ணம் எமக்கு எக்காலத்திலும் தோன்றாது. ஆனால், மக்களுள் ஒருவராக, அரசியல் பார்வையாளராக சிலவற்றை உற்று நோக்கும்போது, திரு.ஸ்டாலினை விட திருமதி.கனிமொழியிடம் “leadership quality” என்று சொல்லக்கூடிய தலைமைப்பண்பு அதிகம் இருப்பதை உணர்கிறேன்.

10. சிறையில் இருந்து சசிகலா வெளிவந்தவுடன், அவரது அரசியல் மூவ் எப்படி இருக்கும்? மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா?

மக்கள் மனநிலையை அறியும் வல்லமை வல்லவனுக்கும் இல்லையன்றோ!.

11. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதான உங்கள் பார்வை என்ன? மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால்?

இந்த கொடுங்கோல் ஆட்சி இனியும் தொடரக்கூடாது என்பதே எனது கருத்து.

12. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு மக்களின் பெருவாரியான ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தற்போதைய சூழலில் திமுக கூட்டணிக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்கலாம் என்பதே எனது பார்வை.

13. Krishna Priya Foundation மூலம் நீங்கள் செய்து வரும் சமூகப் பணிகளுக்கான விதையை யார் விதைத்தது? 

சமூகப் பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக காரணம் இரக்கமே உருவான மறைந்த எனது தந்தையும், மக்களுக்காகவே வாழ்ந்த மறைந்த நம் அம்மா அவர்களும்தான். சிறு வயது முதலே என்னாலான உதவிகளை திரைமறைவில் இருந்து செய்துவந்திருக்கிறேன். திரைமறைவில் இருந்து செய்துவந்ததற்கு காரணம் எனது குழந்தைகள். ஒரு குறிப்பிட்ட பருவம் வரையில் அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வளர்ப்பதென்பது எனது தலையாய கடமையாயிற்று. KrishnaPriya Foundation ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது 2015ம் ஆண்டு நடந்த நேபாள் நிலநடுக்கத்தின்போது. அவ்வருடமே எனது தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். இதன் மூலம் பேரிடர் காலங்களில் மக்கள் பணியாற்றுவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மெரீனாவை சுத்தம் செய்தது, ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவத்திற்கான பொருளாதார உதவி, இருளர், நரிக்குறவர், பெண்கள் மற்றும் திருநங்கையர்களை ஊக்கப்படுத்தி அவர்களை சுயதொழில் தொடங்க உதவி செய்வது, பனை விதைகள் மற்றும் நாட்டுமரக்கன்றுகள் நடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அவற்றை பராமரித்து வளர்ப்பது, நீர்நிலைகளை தூர்வாருவது, பழுதடைந்திருக்கும் அரசு பள்ளி கட்டுமானங்களை சீரமைத்துக் கொடுப்பது போன்ற எங்களால் ஆன உதவிகளை செய்துவருகிறோம். இனியும் செய்துகொண்டிருப்போம்!.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Krishnapriya about admk sasikala jayalalitha dmk mk stalin kanimozhi