அனிதா மரணம்குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறிவரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
இதுதொடர்பாக நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, "அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மருத்துவ படிப்பு கிடைக்காத நிலையில் விவசாய படிப்பை தேர்வு செய்ய போவதாக மாணவி கூறியிருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்பதை எப்படி நம்புவது?
அவர் தானாகவே தற்கொலை முடிவு எடுத்தாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? அல்லது வேறு நவீனமான முறையில் கொலை செய்யப்பட்டாரா? என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த மர்ம முடிச்சுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும். தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாணவி தற்கொலையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகளை குற்றவாளி கூண்டில் நிறுத்த பார்க்கிறார்கள். இதை அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் இந்த நிலை இந்தியா முழுவதும் பரவும் நிலை ஏற்படும். எனவே மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்காக உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்" என்றார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த கிருஷ்ணசாமி, அனிதா மரணத்துக்கு நீதி விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார்.
முதல்வரை சந்தித்தப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி “நீட் தேர்வில் மாணவி அனிதா 86 மதிப்பெண் மட்டுமே பெற்றார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்பதால் வேளாண்மை படிப்பில் சேர உள்ளதாக அனிதா சொல்லி வந்தார். நீதிமன்றம் வரை சென்ற தைரியமான பெண் எப்படி திடீரென தற்கொலை செய்துகொள்ள முடியும். அரசியல் நோக்கத்துக்காக அனிதாவை யாரேனும் தவறாக வழிநடத்தி இருப்பார்களோ என சந்தேகம் உள்ளது. சிவசங்கர், கஜேந்திர பாபு உள்ளிட்டோர் அனிதாவை டெல்லி வரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதனிடையே, மு.க.ஸ்டாலின் அனிதாவை சந்தித்துள்ளார். இதுபற்றியெல்லாம் எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. அரசியல் நோக்கத்துக்காக, நீட் தேர்வை எதிர்க்க அனிதாவை தி.மு.க. பயன்படுத்தி உள்ளனர் என்னும் சந்தேகம் உள்ளது. அனிதா தற்கொலை செய்துகொள்ள யாரோ தூண்டியிருக்கிறார்கள். இது தற்கொலையா என்னும் சந்தேகமும் உள்ளது. இந்தப் பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளிக்க உள்ளேன்” என்றார்.