கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால் நேருவால் பார்லிமெண்டிலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் மூன்று மற்றும் நான்காவது மொழியை படித்துக் கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், போராட்டத்தில் இறங்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/10/gL5aasch40yDjPTBzQcz.jpg)
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெளிவான அறிக்கையே வெளியிட்டு இருக்கிறார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து புரட்சி தலைவி அம்மா, தற்போது வரை எங்களுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை தான். தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் மொழி திணிக்கப்படக் கூடாது. வழக்கத்தில் என்ன இருக்கிறதோ அதுபடி சென்றால் எந்த பிரச்சனையும் இருக்காது.
இவர்கள் மொழி பிரச்சனையை கொண்டு வருகிறார்கள், அப்படி அது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகள் உருவாகும். மத்திய அரசு தேவையில்லாத பிரச்சனைகளை தமிழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்கிறது. அதேபோல எந்த கட்சி வந்தாலும் அ.தி.மு.க வுக்கான தனி பெரும்பான்மை என்றும் குறையாது. தி.மு.க வை எதிர்க்கின்ற திறமையோ வீழ்த்துகிற திறமையோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம் அதன் வரலாறுகளை, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும்.
தொகுதி மறுசீரமைப்பு பற்றி எடப்பாடியார் தெளிவாகக் கூறியதைப் போன்று, பார்லிமென்ட் எண்ணிக்கை கூடித் தான் வரவேண்டும், குறைந்து வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். குறைந்தால் அண்ணா தி.மு.க கடுமையாக எதிர்க்கும் என்பதை பொதுச் செயலாளர் தெளிவாக கூறியிருக்கிறார்.
தமிழகத்திற்கான நிதியை கொடுக்க வேண்டும், அனைத்து மாநிலத்திற்கும் கொடுக்கக் கூடிய சம அளவு தமிழகத்திற்கும் மத்திய அரசு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க வின் நிலைப்பாடு. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாநில அரசு என்ன நிதி கேட்கிறார்களோ அதை மத்திய அரசு கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மது ஆலைகளில் ரெய்டு நடத்தப்பட்டு இப்போதுதான் முடிந்திருக்கிறது. இனிமேல் தான் அது குறித்தான தகவல்கள் தெரியும். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி வந்ததில் இருந்தே ரைடுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அமலாக்கத் துறையின் அறிக்கை வந்ததற்கு பிறகு, அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒன்று கூறுவார் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்று கூறுவார். அது அவரவர் நிலைப்பாடு.
பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து இருக்கிறதா என்றால், தமிழகத்தில் எந்த கட்சி வளர்ந்திருக்கிறது எந்த கட்சி வளராமல் இருக்கிறது என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர் வாழுகின்ற அனைத்து பகுதிகளிலும், அ.தி.மு.க வுக்கு ஏகபோக ஆதரவு இருக்கிறது. தி.மு.க வின் மீது இருக்கிற வெறுப்பு அண்ணா தி.மு.க மீது மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச் செயலாளர் நிச்சயம் கூறுவார்.
மாஃபா பாண்டியராஜனுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சன்னையும் இல்லை. அவரைப் பற்றி நான் எங்கேயும் பேசவில்லை. பொதுவான சில விஷயங்கள் பற்றி மட்டுமே நான் பேசினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.