தர்மபுரி மாவட்டத்தில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டி பூசாரி ஆகப் போகிறாரா குமரி அனந்தன்? என சுப.உதயகுமாரன் கடுமையாக சாடியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் பாரதமாதா கோவில் அமைத்தல், பூரண மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இருந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
பாப்பாரப்பட்டி சென்றதும் அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்து ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் விட்டனர். பின்னர் அவர் அங்கு 2–வது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ‘குமரி அனந்தனின் கோரிக்கையை ஏற்று பாரதமாத ஆலயம் அமைக்க உடனே தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் அங்கு வந்தனர்.
திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோர் குமரி அனந்தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். குமரி அனந்தனுக்கு, திருநாவுக்கரசர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் குமரி அனந்தன் பேசும்போது, ‘திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோரின் கட்டளைக்கு இணங்க உண்ணாவிரதத்தை முடித்து உள்ளேன். இன்னும் சில காலங்களில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், இப்போது போராட்டத்தை விடு என்று கூறிய நீங்கள் அப்போது மீண்டும் போராட்டத்தை எடு என்று கூற வேண்டும்’ என்றார்.
இதற்கிடையே பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அணு சக்திக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன், குமரி அனந்தனின் இந்தப் போராட்டத்தை காரசாரமாக சாடியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தன், ‘பாரத மாதாவுக்கு கோவில் கட்டு’ என்கிற கோரிக்கையோடு ஊர்வலம் போகிறார். உண்ணாவிரதம் இருக்கிறார். ஊடக வெளிச்சத்துக்காக என்னென்னவோ செய்கிறார்.
நாட்டை தெய்வமாக்கி, நாட்டுப்பற்றை மதமாக்கி, வழிபடாதவர்களை வசைபாடுவது வலதுசாரி அரசியல். இவர் பெருந்தலைவரிடம் படித்த அரசியல் பாடம் இதுதானா?
நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவை பற்றி எதுவும் பேசாது, போராட்டங்கள் நடத்தாது ‘நாட்டுக்கு கோவில் கட்டு’ என்று மல்லுக்கட்டுவது என்ன அரசியல்?
பாரத மாதாவுக்கு கோவில் கட்டி, இவர் தர்மகர்த்தா ஆகப் போகிறாரா? அல்லது பூசாரி வேலை பார்க்கப் போகிறாரா? பாரத மாதாவுக்கு "தேவாலயம்" கட்டு, "மசூதி" கட்டு, "குருத்வாரா" கட்டு என்றும் கேட்கலாமே? கோவில் மட்டும்தான் கட்ட வேண்டுமா?
நாட்டு மக்கள் மீதான அன்பும், கடமையுணர்வும்தான் நாட்டுப்பற்றே தவிர, கோவில் கட்டி கும்பிடுவது அல்ல. நாட்டு மக்களுக்கு நூலகங்கள் கட்டுங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டுங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். கோவில் கோரிக்கை வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
நம் நாட்டுக்கு தற்போதையத் தேவை பி.ஜே.பி. பிராண்ட் பித்துக்குளி குறியீட்டு அரசியல் அல்ல. மனிதநேயம் தோய்ந்த, சமூகநீதி போற்றும் முற்போக்கு அரசியல். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.