/tamil-ie/media/media_files/uploads/2017/08/ops-1.jpg)
ஓ.பி.எஸ். வீட்டருகே கடந்த வாரம் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தற்போது கத்தியுடன் ஒருவர் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல அணிகளாக சிதறிக் கொண்டிருக்கிறது. இதில் விசேஷம், ஒவ்வொரு அணியும் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதுதான். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிற கூட்டங்களில் மற்ற அணிகளைவிட கட்சிக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருப்பது நிஜம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கு மத்திய பாதுகாப்பு கேட்டு அந்த அணி எம்.பி.க்கள் டெல்லியில் முறையிட்டனர். அதை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓ.பி.எஸ்.ஸுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன்படி 3 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 மத்திய போலீஸ் படையினர் 24 மணி நேரமும் ‘ஷிப்ட்’ முறையில் ஓ.பி.எஸ்.ஸுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
ஆனால் இந்த பாதுகாப்பையும் மீறி ஓ.பி.எஸ்.ஸை சுற்றி வெடிகுண்டு, கத்தி என பரபரப்புகள் அரங்கேறுவதுதான் இப்போது விவகாரமே! கடந்த வாரம் ஓ.பி.எஸ். பயன்படுத்தி வரும் அரசு பங்களா அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘அது வெடிகுண்டு அல்ல, வெடிகுண்டு மாதிரியான ஒரு பொருள்’ என சமாளித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/IMG-20170806-WA0010-300x232.jpg)
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ். பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கத்தியுடன் ஒரு நபர் அங்கு புகுந்ததாக அமளிதுமளி ஏற்பட்டது. அந்த நபரை ஓ.பி.எஸ்.ஸின் பாதுகாப்பு படையினர் வளைத்து நெட்டித் தள்ளி காரில் ஏற்றினர். அவரிடம் இருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரை, விசாரணைக்காக மாநில போலீஸ் வசம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரயில் அந்த நபரின் பெயர் சோலைராஜா (வயது 50) என்பது தெரிய வந்திருக்கிறது. ‘நான் ஒரு சலவைத் தொழிலாளி! எனது தொழிலுக்கான கத்தியை வேஷ்டிக்குள் வைத்திருந்தேன். நான் அ.தி.மு.க. தொண்டன்; அதுவும் ஓ.பி.எஸ். ஆதரவாளன்! எனது இல்ல விழாவுக்கு ஓ.பி.எஸ்.ஸை அழைக்கவேண்டும் என விரும்பினேன். இதற்காகவே அங்கு சென்று போலீஸாரிடம் அனுமதி கேட்டேன்.
அப்போது எனது வேஷ்டியில் இருந்த கத்தி கீழே விழுந்தது. உடனே ஏதோ தீவிரவாதியை பிடித்ததுபோல, மத்திய அதிகாரிகள் என்னைப் பிடித்து தள்ளினர். ஓ.பி.எஸ்.ஸை வரவேற்க வந்த கட்சிக்காரர்கள் சிலரும் விவரம் தெரியாமல் என்னைத் தாக்கினர். என்னைப் பார்த்தா, கொலைகாரன் மாதிரியா தெரியுது?’ என போலீஸாரிடம் பரிதாபமாக அழுதாராம் சோலைராஜா.
இவர் மீது பழைய வழக்குகள் எதுவும் கிடையாது. எனினும் தீவிர விசாரணைக்கு பிறகே இவரை விடுதலை செய்வதா? அல்லது ரிமாண்ட் செய்வதா? என்பதை முடிவு செய்ய இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ்., ‘எனக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இதேபோல மதுரையில் மு.க.ஸ்டாலினை கத்தியுடன் ஒரு நபர் தாக்க வந்ததாக பரபரப்பான புகார் எழுந்தது. அதன்பிறகே அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்பைக் கொடுத்தது. அந்தப் பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது. ஆனால் அப்போது கத்தியுடன் பாய்ந்ததாக கூறப்பட்ட நபரை முந்தைய தி.மு.க. அரசும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பிறகு வந்த அ.தி.மு.க. அரசும் கைது செய்யவில்லை.
பரவலாக மத்திய பாதுகாப்பை பெறுவதற்காகவும், மத்திய பாதுகாப்பை தக்க வைப்பதற்காகவும் இது போன்ற நிகழ்வுகள் வலிந்து உருவாக்கப்படுகின்றனவா? என்கிற விவாதமும் நடக்கிறது. காரணம், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என வெவ்வேறு விதமான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான பாதுகாப்பு தேவைகளை மத்திய உளவுத்துறை சீரான கால இடைவெளியில் ஆய்வு செய்கிறது.
பாதுகாப்பு பெற்ற சிலருக்கு அந்தப் பாதுகாப்பு தேவையில்லை என உளவுத்துறை கருதினால், அது குறித்து மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் பாதுகாப்பு அம்சங்களின் அளவை குறைத்தோ அல்லது அளவை கூட்டியோ உள்துறை அறிவிக்கும். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்பட சுமார் 40 தலைவர்களுக்கு கடந்த மாதம் அந்த வகையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
ஆனால் இது குறித்து கருத்து கூறும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள், “ஸ்டாலின் விவகாரத்தில் கத்தியுடன் பாய்ந்தவர்(?) கடைசி வரை சிக்கவில்லை. ஆனால் ஓ.பி.எஸ். கூட்டத்தில் கையும் கத்தியுமாக ஒருவர் சிக்கியிருக்கிறார். அதுவும் பிரஸ்மீட்டில்! இதையெல்லாம் யாராவது செட்டப் செய்ய முடியுமா?” என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் அணிகளுக்கு தங்களை சுற்றி பின்னப்படும் சதி வலைகளை அறுக்கவே நேரம் போதவில்லை. தி.மு.க.வுக்கும் இது வேலையில்லை. ஓ.பி.எஸ்.ஸுக்கு யாரால் அபாயம்? என்பது யாருக்கும் புரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.