Advertisment

புதுச்சேரி கலாச்சார சீரழிவு மையமாக மாறி வருகிறது: அ.தி.மு.க பரபர குற்றச்சாட்டு

புதுச்சேரியில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இரவு முழுவதும் மதுக்கடைகள் திறந்திருப்பதால் இளைஞர்கள், இளம் பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pudhucherry

Pudhucherry

புதுச்சேரி அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (09-04-2023) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் இரவு நேரம் முழுக்க முழுக்க மதுபான பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. இரவு நேரத்தில் 2 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதால் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள் கஞ்சாவுக்கும், மது போதைக்கும் சர்வசாதாரணமாக அடிமையாகி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் இளம்பெண்ணுடன் 5 பேர் குடித்துவிட்டு நடு வீதியில் சாலையில் பைக்கில் சென்ற ஒரு இளைஞரை இழுக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

Advertisment

வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளால் புதுச்சேரி மாநில மக்களை பாதுகாக்க முடியாது சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. வருமானத்திற்காக இரவு நேரங்களில் கடை வைத்துக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீரழிந்துள்ளது. அண்டை மாநிலத்தில் இருந்து விதவிதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இரவு நேரத்தில் பார்கள் கூடாது

அறைகுறை ஆடையுடன் பெண்கள் நகரப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றனர். இதற்கு எல்லாம் அரசு அனுமதி கொடுப்பது என்பது நியாயமற்ற செயல். புதுச்சேரியை பொருத்தமட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அரசை செயல்படுத்தி வருகிறார். பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் இவர், இதுபோன்ற செயல்களையும் அனுமதிக்கலாமா? இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சர் அவர்கள் நினைத்தால் உடனடியாக தடுத்து நிறுத்த முடியும். கூட்டணி கட்சியில் இருப்பதால் இதுபோன்ற அநாகரீகமாக நடத்தப்படும் பார்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலம் கலாச்சார சீரழிவு மையமாக மாறி வருகிறது. இந்திய அளவில் தங்கு தடையின்றி போதை பொருள் விற்பனை செய்யும் மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. எனவே முதலமைச்சர் ரங்கசாமி இரவு நேரத்தில் ரெஸ்டோபார், கலாச்சார சீரழிவு நடப்பவைகளை ரத்து செய்ய வேண்டும்.

பெண்ணாக உள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் தனக்குள்ள பொறுப்பும், கடமைகளையும் உணர்ந்து இதுபோன்ற கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். விபச்சாரத்தை தூண்ட கூடிய ஸ்பா, மசாஜ் கிளப் போன்றவைகளின் அனுமதியை துணைநிலை ஆளுநர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மாநில எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை சீரழியாமல் தடுக்க எடப்பாடியார் அனுமதி பெற்று அதிமுக மக்களை திரட்டி போராட்டம் நடத்தும்" என்று கூறினார். பேட்டியின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழகப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment