கதிராமங்கலதில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு குத்தகை உரிமம் வழங்கி மக்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராடிய போது கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க கோரியும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற கோரியும் அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கதிராமங்கல கிராம மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்பினர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக கிராம மக்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மாசடைந்த நிலத்தடி நீரை காண்பித்து பொதுமக்கள் ஸ்டாலினிடம் முறையிட்டனர். ஓஎன்ஜிசி பணிகள் காரணமாக கதிராமங்கலம் பாலைவனமாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால், உடல் நலம் பதிப்படைந்துள்ளது எனவும் ஸ்டாலினிடம் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஸ்டாலின், கதிராமங்கலத்தில் ஆய்வுப்பணிக்காக மட்டுமே ஓஎன்ஜிசி-க்கு திமுக அனுமதியளித்தது. அதிமுக ஆட்சியின் போது தான் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. மக்களின் கருத்துகளை கேட்காமல் அதிமுக குத்தகை உரிமம் வழங்கியுள்ளது. ஓஎன்ஜிசி-க்கு குத்தகை உரிமம் வழங்கியது மக்களுக்கு செய்த துரோகம் என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், கதிராமங்கலம் போராட்டம் குறித்த எந்த கேள்விக்கும் முதல்வர் பழனிச்சாமி பதிலளிக்கவில்லை. கலவரத்தில் ஈடுபட்டதாக மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை கிண்டல் செய்யும் விதத்தில் பேரவையில் அவர் பேசினார். எங்களது எதிர்ப்பை தொடர்ந்து, முதல்வர் தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொண்டார். கதிராமங்கலத்தில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவில்லை.
கதிராமங்கலம் மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த போராட்டத்துக்கு என்றைக்கும் திமுக பக்கபலமாக இருக்கும். போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி, நடிகர் - நடிகைகளை அழைத்து பேசுகிறார். ஆனால், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேசவில்லை. அவர்களை அழைத்து பிரதமர் பேசியிருக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னையை அவர் கண்டு கொள்வதில்லை. அப்துல் கலாம் மணிமண்டபத்தில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். தனிப்பட்ட ஒரு மதம் சார்ந்த புத்தகத்தை வைத்திருக்க கூடாது. தமிழகத்தில் மதவாதத்தை திணிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அப்துல் கலாமை அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தற்போதைய அதிமுக அரசு ஆதரவளித்து வருகிறது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி நாளையோ அல்லது நாளை மறுநாளோ என்று தொங்கிக் கொண்டுள்ளது. திமுக ஆட்சி ஏற்படும் போது மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.