இரண்டு நாட்களாக நடை பெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் 15ம் தேதி முதல் குதித்தனர். இந்நிலையில் நேற்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடன் 11 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையின் போது, அரசாணை பிறப்பிக்கப்பட 750 கோடி ரூபாயோடு செப்டம்பர் 2017ல் வழங்குவதாக் தெரிவிக்கப்பட்ட ரூ. 500 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.1250 கோடி உடனடியாக வழங்கப்படும்
இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள சட்டப்பூர்வமான நிலுவைத்தொகை செப்டம்பர் 2017 மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
பணியாளர்களின் சம்பளத்தில் சட்டப்பூர்வமாக பிடித்தம் செய்யப்படும் தொகையை சம்பந்தப்பட்ட இனங்களில் செலுத்துவது குறித்து கொள்கை ரீதியான முடிவெடுத்து எந்த தேதியிலிருந்து அமலாக்கப்படும் என்பதை 3 மாதங்களில் அறிவிக்கப்படும்.
13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். போக்குவரத்து கழகங்களின் நிதி நிலமையை சீர் செய்து தொடர்பாக படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த சமரசத்தைத் தொடர்ந்து பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்ததை கைவிடுவது என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்.எம்.எஸ்., ஏஏஎலெப்,டிட்பல்யூயு, ஏடிபி அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
முன்னதாக மாலையில் போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இல்லை என்றால் எஸ்மா சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் வாபஸ் பெறப்பட்டத்தையடுத்து, இரவில் அரசு பஸ் போக்குவரத்து சீரடைய ஆரம்பித்தது.