Advertisment

தலைமைச் செயலகத்தில் அவை உரிமைக் குழுக் கூட்டம் தொடங்கியது

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ஆளும் அதிமுக அரசு தப்பிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த அவை உரிமை குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூடியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எழுப்பிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ-க்கள் சிலர் திடீரென குட்கா பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏ-க்கள் 20 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த அவை உரிமை குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று கூடியுள்ளது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவை உரிமைக் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தற்போது தொடங்கி நடைபெற்று வரும் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் 7 பேர், திமுக உறுப்பினர்கள் மதிவாணன், பெரிய கருப்பன், சுந்தர், ரகுபதி, ரவிச்சந்திரன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் அக்கட்சியின் பேரவை கொறடாவுமான விஜயதாரணி ஆகியோர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் ஜக்கையன், ஏழுமலை, தங்கதுரை ஆகியோர் பங்கேற்கவில்லை.

குட்கா விவகாரம் தொடர்பாக இதுவரை அவை உரிமை குழு விவாதிக்கவில்லை. தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அவை உரிமை குழுவை கூட்டி குட்கா பாக்கெட்டுகளை சபையில் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டால் கூட ஆளும் அதிமுக அரசு தப்பிக்க முடியும். எனவே, இதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment