தமிழகத்தில் நெய்வேலி, ஓசூர், சேலம் ஆகிய சிறிய நகரங்களுக்கும் விமானத்தில் செல்ல வசதியாக விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. உடான் திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில், குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்க, மத்திய அரசு உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில், ஒரு மணி நேரம் பயண தூரத்தைக்கொண்ட நகரங்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 500 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணம், 2 ஆயிரம் ரூபாய். இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில், வர்த்தக ரீதியிலான வளர்ச்சியை முன்னெடுக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே உடான் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 3 சிறிய நகரங்களில் விமான சேவையைத் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் கீழ் நெய்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய சிறு நகரங்களில் விமான சேவை தொடங்கவுள்ளது.