சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் குறித்த புகார் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
இதனிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் குறித்த புகார் கடிதம் ஒன்று, விசாரணை அதிகாரி வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாமல் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தை, புகாருக்கு ஆளாகியிருக்கும் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.
புகார் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்புப்பிரிவு அதிகாரியாக, கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கஜராஜ் மாகனூர் பணியாற்றி வருகிறார். தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருக்கு நெருக்கமானவர் எனக் கூறிக் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களை இவர் மிரட்டி வருகிறார். இவர், சசிகலாவுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். சசிகலாவுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள், ஓசூரில் உள்ள எம்எல்ஏ ஒருவரது வீட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
சசிகலாவை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள் ஆகியோர் முன் அனுமதி பெறாமல் கஜராஜ் மாகனூருக்கு லஞ்சம் கொடுத்து சிறைக்குள் வந்தனர். சிறை விதிகளை மீறி இந்த சந்திப்பு நடக்கிறது. குறிப்பாக டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக், அதிமுக (அம்மா) அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் இரவு 7 மணிக்கு பிறகும் சிறைக்குள் வந்து சசிகலாவை சந்தித்துள்ளனர். இதற்காக பெருமளவு லஞ்சப் பணம் கைமாறியுள்ளது.
சிறைக்கு வெளியே பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டிய அவர், சிறைக்குள் சிறை கண்காணிப்பாளர் அறையில் தான் இருப்பார். இது கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.