தீவிரவாதம் பற்றிய கவலையை வெளிப்படுத்திய கமல்ஹாசனின் உயிரை எடுப்போம் என மிரட்டுவதா? என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்தது.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமீப காலமாக பல்வேறு பொதுப்பிரச்னைகள் பற்றி கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன் "இந்து தீவிரவாதம்" பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இஸ்லாம் மதத்தில் எப்படி மிகச் சிலரே தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்களோ அப்படி இந்து மதத்திலும் ஒரு சிறு கூட்டமே இந்த வேலையில் இறங்கியிருக்கிறது.
கமல்ஹாசனும் "இந்து வலதுசாரியினர்" பற்றியும், அவர்கள் பலாத்காரத்தை கையில் எடுப்பது பற்றியுமே பேசியிருக்கிறார். "முஸ்லிம் தீவிரவாதம்" என்று பேசிவரும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் "இந்து தீவிரவாதம்" எனும் சொல்லாடலுக்கு மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினால் "முஸ்லிம் தீவிரவாதம்" எனப்பேசுவதை அவர்கள் கைவிடவேண்டும்.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் வாழும் நமதுநாட்டில் மதங்கள் பற்றிய விவாதங்கள் நடக்கலாம். ஆனால் அதிலே பலாத்காரத்தை புகுத்தும் போது அது மதம் தொடர்பான தீவிரவாதமாக அல்லது பயங்கரவாதமாக மாறிப் போகிறது. இந்த வேலையைச் செய்வது சாதாரண மத நம்பிக்கையாளர்கள் அல்ல; மாறாக அரசியல்அதிகார நோக்குடைய ஒரு சிறுகூட்டமே. அந்த வெறியர்களைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. காரணம் அவர்கள் தங்கள் செயல்களால் மக்கள் ஒற்றுமையை சிதைக்கிறார்கள்.
சிறுபான்மை மதங்களின் பெயரால் மட்டுமல்ல பெரும்பான்மை மதமாகிய இந்து மதத்தின் பெயராலும் இங்கே தீவிரவாதச் செயல்கள் நடத்தப்படுகின்றன என்பது கண்கூடான உண்மை. பழைய வரலாறு ஒருபுறமிருக்க, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உண்டு. தேசப்பிதா காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது வரை, 2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் முதல் இன்று மாட்டிறைச்சிக்காக நடத்தப்படும் படுகொலைகள் வரை அதற்கான ரத்த சாட்சியங்கள் அனேகம்.
கமல்ஹாசனின் கவலையை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்வதே, இனியும் தீவிரவாதங்கள் தொடராமலிருக்க என்ன வழி எனக் கண்டறிவதே நியாயம். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இப்படியாகத்தான் சிந்திக்கிறது, பிறரையும் சிந்திக்க வேண்டுகிறது.
ஆனால் பாஜக உள்ளிட்ட சங் பரிவாரத்தினரோ அவர் அனைத்து இந்துக்களையும் தீவிரவாதிகள் எனச் சொல்லிவிட்டதாக பொய் வியாக்யானம் தந்து அவர் மீது நாகரிகமற்ற விமர்சனங்களை வீசியிருக்கிறார்கள், அவர் மீது உ.பி.யில் வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்து மகாசபை தலைவர் ஒருவர் அவரது உயிரை எடுக்க வேண்டும் என்று கொக்கரித்திருக்கிறார். இவை பச்சையான மிரட்டல் வேலைகள். இவற்றை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
சாதாரண இந்துக்கள் வேறு, "இந்துத்துவா"வாதிகள் எனும் மதவெறிக்கூட்டம் வேறு. சாதாரண இந்துக்களின் பிரதிநிதிகள்அல்ல இந்தக் கூட்டம். இந்து மதத்தின் பெயரால் இவர்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயன்றால் சாதாரண இந்துக்களே இவர்களை எதிர்ப்பார்கள். மதவெறியர்களின் சதிச்செயல்களை முறியடித்து மக்கள் ஒற்றுமையைப் பேண முன்வருமாறு அனைத்து மனிதநேய சக்திகளையும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.