நாடு முழுவதும் அமலில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்ளான மது விற்பனை தடை, நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் பாலு கடந்த 2012-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், " நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் செயல்படும் அனைத்து மதுக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் மூட வேண்டும்" என உத்தரவிட்டது. இதையடுத்து, 500 மீட்டர் தொலை வில் செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளும், ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கி வந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட்டன. இதனால், பெரும்பாலானோர் வேலையிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள மது விற்பனை தடை நகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. சண்டிகரை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில், அந்த தொண்டு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மது விற்பனை தடை தொடர்பான விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
அதில், "கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு தான் உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குட்பட்ட உரிமம் பெற்ற மதுக்கடைகளை மூட தேவையில்லை" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகர எல்லைக்குள் சிறு தூரம் மட்டுமே ஓடும் நெடுஞ்சாலைகளுக்கும் மது விற்பனை தடையிலிருந்து இயல்பாகவே விதிவிலக்கு கிடைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற விளக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் நகராட்சி எல்லைக்குட்பட்ட மூடப்பட்ட கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டு அதன்பின்னர் முடிவெடுக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.