நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ்- Liquor shops in Highways: Supreme court's explanation is shocking one, Ramadoss says | Indian Express Tamil

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்

தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப் படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தீர்ப்பு சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

சட்டவிரோத வழிகளில் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசு

மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 90,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது வணிகம் மூலம் கிடைத்த வருவாய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு சட்டவிரோத வழிகளில் மதுக்கடைகளை திறந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்த நிலையில், தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் வியப்பளிக்கிறது

நகர்ப்பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் அதற்காக அளித்துள்ள விளக்கம் வியப்பாக உள்ளது. ‘‘நெடுஞ்சாலைகள் எனப்படுபவை மாநகரங்களையும், நகரங்களையும், கிராமங்களையும் இணைப்பவை தான். நகரப்பகுதிகளுக்குள் செல்லும் நெடுஞ்சாலைகளில் உரிமம் பெற்று அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை 15.12.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தடை செய்யவில்லை. இது நாடு முழுவதும் உள்ள நகரப் பகுதிகளுக்கு பொருந்தும்’’ என்று கூறித் தான் நகரப்பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த இரு தீர்ப்புகளுக்கும், இயற்கை நீதிக்கும் எதிராக உள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பது துரதிருஷ்டவசமானது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

மதுக்கடைகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக 31.03.2017 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘மது வணிகத்திற்கு தடை விதிப்பதில் தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும், விபத்துக்களை ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் தான் நடக்கிறது என்று கூற முடியாது. அதனால் தான் இரு வகை நெடுஞ்சாலைகளிலும் மது வணிகத்திற்கு தடை விதித்தோம்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

புரியாத புதிர்

மதுவுக்கு தடை விதிப்பதில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இப்போது நகரங்களுக்குள் செல்லும் சாலைகளையும், நகரங்களுக்கு வெளியில் உள்ள சாலைகளையும் பிரித்துப் பார்த்து மதுவுக்கு அனுமதி அளித்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

அதுமட்டுமின்றி, மது வணிகத் தடையிலிருந்து குடிப்பகங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மது லாபி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போது, அக்கோரிக்கையை ஏற்றால், சாலையோர மதுக்கடைகளை மூட ஆணையிட்டதன் நோக்கமே சிதைந்து விடும் என்று கூறி, அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஆனால், நகரப்பகுதிகளில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கும் முடிவு அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தெரிந்தும் நகரப் பகுதிகளில் சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிப்பது வியப்பளிக்கிறது.

சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்பது தான் நோக்கம்

தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடும்படி தீர்ப்பளிக்கப்பட்டதன் நோக்கமே சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்பது தான். இதிலிருந்து நகர்ப்புற நெடுஞ்சாலையோர மது வணிகத்திற்கு மட்டும் விலக்களிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 25 நகரப்பகுதிகளாவது இருக்கும். உச்சநீதிமன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரும் வாகனத்தின் ஓட்டுனர் 25 இடங்களில் மது அருந்த வாய்ப்புள்ளது.

நகரப்பகுதிகளில் மது அருந்திவிட்டு, புறநகர நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு போதை ஏற்படாது என்றோ, விபத்து ஏற்படாது என்றோ உத்தரவாதம் தர முடியுமா? இதை உணராமல் நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பது வேதனையளிக்கிறது.

மதுக்கடைகளை திறப்பதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றில் கவனம் செலுத்தாத பினாமி அரசு மதுக்கடைகளை திறப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் தமிழ்நாட்டு மானவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெற நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் மது விற்பனைக்காக மட்டும் துடிப்பதிலிருந்தே அவர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதை உணர முடியும்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் நேரம்

தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையற்ற ஆட்சி தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். அதிலிருந்து பா.ம.க. ஒருபோதும் பின்வாங்காது. தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப் படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உணர்ந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை பா.ம.க. நடத்தும்; வெற்றி பெறும்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Liquor shops in highways supreme courts explanation is shocking one ramadoss says