அதிமுக பொதுக்குழு பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடியது. எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து நடத்திய இந்தப் பொதுக்குழுவில் மெஜாரிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக பொதுக்குழு, அந்தக் கட்சியின் தலைவிதியை மட்டுமல்ல, தமிழக அரசியலின் தலைவிதியையும் தீர்மானிக்கிறது. அதனால்தான் செப்டம்பர் 12-ம் தேதி (இன்று) சென்னையை அடுத்த வானகரத்தில் கூடிய பொதுக்குழுவுக்கு அத்தனை எதிர்பார்ப்பு.
அதிமுக பொதுக்குழுவுக்கு முன்தினம் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் தடை விதித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ‘தடையில்லை’ என அறிவித்தது. எனவே உற்சாகமாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு ஏற்பாடுகளில் மும்முரமானார்கள். இரவு முழுக்க பொதுக்குழு மண்டபத்தை அலங்கரிப்பதிலும், வழி நெடுக வரவேற்பு பதாகைகளை அமைப்பதிலும் கட்சி நிர்வாகிகல் கண் துஞ்சாமல் இறங்கினர்.
தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மேற்பார்வையில் ஏ.சி. பஸ்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். முன் தினம் வரை பொதுக்குழு நடக்குமா? நீதிமன்றம் தடை விதிக்குமா? என பக் பக் மனநிலையிலேயே இவர்கள் இருந்தார்கள்.
இன்று காலை அதே ஏ.சி. பஸ்களில் இவர்கள் வானகரத்தில் பொதுக்குழு கூடிய ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுக்குழுவில் சசிகலாவை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படுமா? புதிய பொதுச்செயலாளர் நியமனம் செய்யப்படுவாரா? என ஏக எதிர்பார்ப்புகள் இருந்தன. அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி மொத்த தமிழக அரசியல் வட்டாரமும் உற்று நோக்கிய பொதுக்குழுவின் live updates இங்கே...
மதியம் 01:00 - காலை 10:35 மணிக்கு தொடங்கிய செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் 12 தீர்மானங்களை நிறைவேற்றியபின் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.
மதியம் 12:50 - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசிய போது, "கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக என்ன தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் கட்சியை வழிநடத்த தயாராக உள்ளேன்" என்றார்.
மதியம் 12:32 - முதல்வர் எடப்பாடி பொதுக்குழுவில் பேசிய போது, "ஜெயலலிதா இல்லாத நிலையில், நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பிரிந்த இயக்கங்கள் ஒன்றிணைந்த வரலாறில்லை. ஆனால், நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழகத்தில் ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது அதிமுக தான். அந்த புகழ் ஜெயலலிதாவையே சாரும். யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடை விதிக்காததே நமக்கு கிடைத்த முதல் வெற்றி தான்" என்று தெரிவித்தார்.
காலை 11:43 - கட்சி விதி எண் 19-ல் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம்.
காலை 11:40 - அதிமுகவின் சட்ட விதிகளில் மாற்றம் செய்து வழிகாட்டு குழுவுக்கு முழு அதிகாரம் வழங்க தீர்மானம். பொதுச் செயலாளருக்கான அதிகாரம் வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உண்டு. ஒருவரை கட்சியில் சேர்க்கவோ, நீக்கவோ இவர்கள் இருவருக்கும் அதிகாரம் உண்டு என பொதுக்குழுவில் ஒப்புதல்.
துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் செயல்படுவோர் எனவும் அறிவிப்பு.
காலை 11:36 - இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. ஜெயலலிதாவிற்கு பிறகு இனி யாரும் பொதுச் செயலாளர் கிடையாது. அதற்காக அதிமுக சட்டவிதியில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும்.
காலை 11:32 - கடந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து.
காலை 11:30 - ஜெ மணிமண்டபம் கட்ட 15 கோடி ஒதுக்கியுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வர்தா புயலின் போது சிறப்பாக செயல்பட்ட அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
காலை 11:23 - டிடிவி தினகரனின் பதவியே செல்லாது என்கிற போது தினகரன் புதிதாக உறுப்பினர்களை நியமனம் செய்தது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது என்றும், யார் யார் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அந்த பதவிகளில் அவர்கள் தொடர்வர் எனவும் தீர்மானம்.
காலை 11:15 - தீர்மானங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்து வருகிறார். இதில் முதல் தீர்மானமாக 'ராமர், லட்சுமணன் போன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தமிழகத்தை காகாப்பாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என்ற முதல் தீர்மானத்தை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வாசித்தார்.
இரண்டாவதாக, அதிமுக(அம்மா - புரட்சித் தலைவி அம்மா) என்ற அணிகளை ஒரே கட்சியாக கொண்டு வர தீர்மானம். இரு அணிகளும் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது.
காலை 11:10 -பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, "ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்பவர்கள், ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுபவர்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள். ஆட்சியை வீழ்த்துவோம் என்பவர்களிடம், சுயநலம் தவிர வேறென்ன இருக்க முடியும்" என்றார்.
காலை 11:05 - பொதுக்குழுவை நடத்தித்தரக் கோரி மதுசூதனனை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்தார். அதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.
காலை 11:00 - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரவி பெர்னார்ட் தொகுத்து வழங்கி வருகிறார்.
காலை 10:56 - அதிமுக பொதுக்குழுவில் முறையான இருக்கை வசதிகள் இன்றி பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அலைக்கழிப்பு.
காலை 10:53 - பொதுக்குழு மேடையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காலை 10:45 - ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 10:40 - பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் 3 வரிசையில் 57 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த பொதுக்குழு மேடையில் 45 பேர் அமர்ந்திருந்தனர்.
காலை 10:34 - பலத்த பாதுகாப்பிற்கிடையே அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியது.
காலை 10:31 - டிடிவி ஆதரவாளரும், டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
காலை 10:25 - இன்னும் சில நிமிடங்களில் பொதுக்குழு கூட உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காலை 10:15 - இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இதுவரை 95% பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 10:10 - டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுவரை அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வரவில்லை. ஒட்டுமொத்தமாக கடந்த முறை பொதுக்குழு நடந்த போது கூடிய கூட்டத்தை விட, இப்போது சற்று குறைவாகவே உறுப்பினர்கள் கூடியிருப்பதாக கூறப்படுகிறது.
காலை 9:47 - எதிர்பார்க்கப்படும் தீர்மானங்கள்:
26.12.2016 முதல் சசிகலா சிறைக்கு செல்லும் வரை அவர் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் ரத்து.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்.
இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது.
என்றும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்.
கட்சியில் ஒருவரை நீக்கவோ சேர்க்கவோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம்.
இதில் சசிகலா நீக்கம் மட்டும் தீர்மானத்தில் இடம்பெறாது மாறாக ஒதுக்கி வைக்கப்படலாம் எனத் தகவல்.
காலை 9:43 - இதுவரையில் வந்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 800-ஐ தொட்டுள்ளது.
காலை 9:38 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தபிறகும் கூட இன்னும் பல பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வந்து சேரவில்லை.
காலை 9:32 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை.
காலை 9:25 - இன்று நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து, வழிகாட்டு குழுவிற்கு அதிகாரம் வழங்க தீர்மானம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தகவல்.
காலை 9:21 - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வானகரம் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
காலை 9:12 - அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர். மாவட்டம் வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
காலை 9:03 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார்.
காலை 8:50 - சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.