ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்! எனவே வேட்பாளர்களை துரிதமாக முடிவு செய்யவேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மீண்டும் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக அம்மா அணி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், தீபா அணி சார்பில் ஜெ.தீபா ஆகியோரும் மீண்டும் களம் காண்கிறார்கள்.
#AIADMK candidate for #RKNagarByPoll Thiru E. Madhusudhanan pic.twitter.com/uk0IEqrD0g
— O Panneerselvam (@OfficeOfOPS) November 30, 2017
ஆர்.கே.நகரில் ஒருங்கிணைந்த அதிமுக.வின் வேட்பாளர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது. அதிமுக.வின் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன் உள்பட 23 பேர் கட்சி தலைமை அலுவலகத்தில் சீட் கேட்டு விண்ணப்பித்தனர்.
இ.மதுசூதனன் அல்லது பாலகங்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே விவாதம் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் வேட்பாளரை முடிவு செய்வதற்காக அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சி மன்றக்குழு Live Updates
காலை 11.45: மதுசூதனனை வேட்பாளராக அறிவித்ததும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நாளை (நவம்பர் 30) மதுசூதனன் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காலை 11.30 : இரண்டரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக இ.மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்தத் தேர்வு நடந்ததாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.
ஆர்.கே.நகர் தொகுதியின் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு இ.மதுசூதனன்.
அம்மா வின் ஆசி பெற்ற வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கே???? #AIADMK #RKNagar pic.twitter.com/TUpLhKNr11
— Hari Prabhakaran (@Hariadmk) November 30, 2017
காலை 11.00 : தொடர்ந்து 2 மணி நேரத்தை கடந்து கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மதுசூதனனா, பாலகங்காவா? என்பது தொடர்பான விவாதம் நடக்கிறது. தேர்தல் தலைமை பொறுப்பாளராக யாரை நியமனம் செய்வது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
காலை 10.00 : விண்ணப்பித்த அனைத்து படிவங்களையும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அவர்களை சமரசம் செய்துவிட்டே வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்கிற அணுகுமுறையை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மேற்கொண்டிருக்கிறார்கள். எனவே ஆலோசனைக் கூட்டம் நீண்டு கொண்டு போகிறது.
காலை 9.20 : ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்திருந்த 23 மனுக்களையும் முதல்வரும் துணை முதல்வரும் ஆய்வு செய்தனர். இதர ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான மதுசூதனன், தமிழ் மகன் உசேன், வளர்மதி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வேணுகோபால் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 9 ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களில் கன்னியாகுமரியை சேர்ந்தவரான ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் உடல்நலப் பிரச்னை காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
காலை 9.10 : முதல்வரும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். கூடியிருந்தவர்களை நோக்கி கை கூப்பியபடி நகர்ந்த முதல்வரை, அதிமுக அலுவலக செயலாளர் மகாலிங்கம் அழைத்துச் சென்றார். சிறிது இடைவெளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தந்தார்.
காலை 9.05 : வழக்கத்தைவிட கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமாக வருகை தந்தனர். வேட்பாளரை அறியும் ஆவல்தான் காரணம். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.
காலை 9.00 : காலை 9.30 மணி முதல் அதிமுக அலுவலகத்திற்கு கட்சி முக்கிய பிரமுகர்கள் வர ஆரம்பித்தனர். ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெறாத அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ ஆகியோரும் முன்கூட்டியே வந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.