தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 12 மாநகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1.30 லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கான பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது.
இப்பதவிகளுக்கு புதியவர் களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில், முறையாக இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் அவசர சட்டம் மூலம் நியமிக்கப்பட்டனர். வரும் ஜூன் 30ம் தேதியுடன் தனி அதிகாரிகள் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 3வது முறையாக தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தனி அதிகாரிகளின் பதவி காலம் நீடிக்கப்பட்டு இருப்பதால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே தெரிகிறது.