உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் - ஹைகோர்ட்!

4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம்  பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்த கோரி தி.மு.க  சார்பில் தாக்கல் செய்த புதிய மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக  திமுக  அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இது தொடர்பாக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவில்லை என  நான்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். மேலும் (கடந்த ஆண்டு 2016) டிசம்பர் 31 இறுதிக்குள் புதிய அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 14 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால், தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை முறையாகக் கடைபிடித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலமாக சரிபார்க்க வேண்டி இருப்பதால், ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் காலம் முடிவதற்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என உள்ளது. ஆனால் அதனை தேர்தலை நடத்தாமல் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளனர். எனவே உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த வேண்டும் அது தொடர்பாக கால கொடு நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவில்லை எனவும், மேலும் மாநில தேர்தல் ஆணையம் மே 14-ம் தேதிக்குள்ளாக தேர்தலை நடத்துவோம் என உத்தரவாதம் அளித்து விட்டு தேர்தலை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் ஒவ்வொரு முறையும் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கில் மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்மு வழக்கு தொடர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுடன் கை கோர்த்து தேர்தலை நடத்த மறுக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது சிறப்பு அதிகாரிகளை கொண்டு உள்ளாட்சியை நிர்வகிக்கிறது, ஆனால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை எனவும் வழக்கறிஞர் வில்சன் குற்றம்சாட்டினார்.

அப்போது நீதிபதி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாதது ஏன் ? என  கேள்வி எழுப்பினார். 
அதற்கு மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நெடுஞ்செழியன், உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது அதனால் தேர்தல் நடத்த முடியவில்லை, என கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, இந்த மனு தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

×Close
×Close