94 years old independent candidate Kamakshi : தமிழகம் முழுவதும் வருகின்ற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என்று பெரிய கட்சிகளுக்கு இணையாக களம் இறங்கி மாற்றங்களை உருவாக்க காத்திருக்கின்றனர் சுயேட்சை வேட்பாளர்கள். அப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் எப்படி கவனத்தை ஈர்த்தார்களோ அப்படியே நம்முடைய கவனத்தை ஈர்க்கிறார் 94 வயது மதிக்கத்தக்க, பெசன்ட் நகரில் வசிக்கும் காமாட்சி சுப்ரமணியன்.
பெசன்ட் நகர், அடையாறு பகுதிகளை ஒருங்கிணைத்த வார்டு எண் 174-ல் அவர் போட்டியிடுகிறார். சமூக சேவையில் ஆர்வமிக்க காமாட்சியை தேர்தல் அரசியலுக்கு வர வைத்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள முயன்றது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். பெசன்ட் நகர் மக்கள் சந்திக்கும் பல்வேறு இன்னல்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.
"10 வருடங்களாக தேர்தல்கள் நடைபெறவில்லை. யாரும் எந்த மக்கள் பணிகளையும் செய்யவில்லை. கொரோனா, வெள்ளம் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள், அதிகாரம் இருக்கும் இடத்தை நோக்கி செல்வதற்கு பதிலாக, மக்கள் பணியை செய்ய விரும்பும் நாம் ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற கேள்வி எழவே இம்முறை தேர்தலில் களம் இறங்குகிறேன்" என்றார் காமாட்சி.
தேர்தலில் போட்டியிடும் முடிவு குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் கூறிய போது அவர்களின் பதில் என்னவாக இருந்தது என்று கேட்ட போது, ” என்னுடைய உடல் நலம் குறித்து தான் அவர்கள் அதிகம் கவலை அடைந்தனர். தேர்தல் என்றவுடன் முதலில் அச்சம் அடைந்தனர். ஆனாலும் என்னுடைய நோக்கம் என்ன என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட அவர்கள் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அது என்னை உற்சாகமாக தேர்தலில் பங்கேற்க வைத்துள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது” என்று அவர் கூறினார். ஸ்பார்க் என்ற அமைப்பின் மூலம் அடையாறு & பெசன்ட் நகர் பகுதி மக்கள் சந்திக்கும் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் காமாட்சி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். காமாட்சிக்கு 6 பேரன் - பெயர்த்திகளும், 4 கொள்ளு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு
இன்று ராஜாஜி பவன் அமைந்திருக்கும் இடம், அன்று பெசன்ட் நகரில் இருந்த ஒரே ஒரு திறந்தவெளி பகுதி. எனவே அங்கு ராஜாஜி பவன் வரக்கூடாது என்று வீடு வீடாக சென்று நோட்டீஸ் ஒட்டிய தன்னுடைய இளம் வயது நாட்களைப் பற்றி கூறுகிறார் காமாட்சி. 4வது அவென்யூவில் பூங்கா, கடற்கரையில் பழுது அடைந்த நினைவுச் சின்னத்தை சீரமைத்தல் போன்று பல்வேறு தேவையான விசயங்களுக்காக குரல் கொடுப்பதோடு நிர்வாகிகளுடன் பேசி உடனடியாக அந்த பணிகளை முடித்து வெற்றியும் பெற்றுவிடுகிறார் இந்த இளம் சமூக சேவகி. 1946-ல் திருமணம் நடைபெற்றது. "அதற்கு முன்பு நான் படித்துக் கொண்டிருந்தேன். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்திருந்தோம். தொலைக்காட்சி போன்ற அம்சங்கள் எல்லாம் அன்று இல்லை. எனவே உலக நடப்புகளை நாங்கள் செய்தித்தாள்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இன்றும் அந்த பழக்கம் எனக்கு தொடர்கிறது", என்று கூறினார் காமாட்சி.
"தொடர்ந்து இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் அதில் ஃப்ரெஷ்ஷாக ஒன்றும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி என்று கூறுகிறார்கள். புடாபெஸ்ட்டை போன்று உங்களின் நகரம் மாறும் என்கிறார்கள். நாம் இருப்பதோ தமிழ்நாட்டில், தமிழகத்தின் சூழலுக்கு ஏற்றவாறு நகரை மாற்றி அமைப்பது தானே முறை. புடாபெஸ்ட் யாருக்கு வேண்டும்?", என்று கூறிய அவரிடம், கட்சிகள் ஏதேனும், உங்களுக்கு போட்டியிட வாய்ப்புகளை வழங்கியதா என்று கேட்டோம். அதற்கு அவர் “பாஜக, அதிமுகவினர் தொடர்ந்து அவர்களின் கட்சியில் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் என்னால் முடியாது என்று கூறிவிட்டேன்” என்றார்.
மழை நீர் சேகரிப்பு, வெள்ள நீர் வடிகால், பாதசாரிகளுக்கு இடையூறுகள் இல்லாத நடைபாதை என்று பல திட்டங்களை தன்னுடைய வார்டு மக்களுக்காக தயாரித்து வைத்திருக்கிறார் காமாட்சி. அருகில் இருக்கும் மீனவ குடியிருப்புப் பகுதியில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எவ்வளவு தூரம் அறிந்து வைத்துள்ளீர்கள் என்று கேட்ட போது, ”முன்பு போல் மீன் பிடிப்பு பணிகள் இப்போது நடைபெறுவதில்லை என்று பலர் கூற கேட்டிருக்கின்றேன். மேலும் கடலுக்கு சென்று அவர்கள் படும் இன்னல்கள் எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை களைய என்னால் முடிந்ததை செய்வேன்” என்றும் அவர் கூறினார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அவர் அரிக்கேன் விளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே மக்கள் மத்தியில் நன்கு பரிட்சையமான நபர் என்பதால் அவரைப் பற்றிய ஒரு அறிமுகமே தேவையில்லாமல் போய்விட்டது. எங்கு வாக்கு சேகரிக்க சென்றாலும், காமாட்சி பாட்டியைப் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும். நிச்சயமாக நாங்கள் அவருக்கு தான் வாக்களிப்போம் என்று கூறுகிறார் ரோஹித். டிஜிட்டல் பிரச்சாரங்கள் எங்களுக்கு பெரிய அளவில் உதவியுள்ளது என்றும் கூறுகிறார் அவர். இதுவரை பத்திரிக்கைகளில் காமாட்சி குறித்து வெளியான செய்திகள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் யூடியூபில் அவரைப் பற்றி காணக்கிடைக்கும் தகவல்கள், இந்த வேட்பாளரின் புகழை பெசன்ட் நகர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரப்பியுள்ளது என்றே கூறலாம் என்கிறார் ரோஹித். 10 வருடங்களாக காமாட்சி பாட்டியுடன் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் ரோஹித். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் காமாட்சி பாட்டியுடன் பிரச்சாரத்திற்கும் செல்கிறார்.
"பல்வேறு கட்சிகளில் இருந்து கவுன்சிலர்கள் இந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு அவர்கள் பல வகையில் தேவையான வசதிகளை பெற்றுக் கொடுத்தாலும், கட்சி முடிவுகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். பல சிறப்பு திட்டங்களை அவர்கள் கொண்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து ஒரே திட்டத்திற்காக மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது", என்று கவலை தெரிவிக்கின்றார் ஸ்பார்க் அமைப்பின் இணை நிறுவனர் பாபு. சாஸ்திரி நகரில் வசித்து வரும் அவர் மெரைன் பயாலஜிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்பார்க் மூலம் 20 வருடங்கள் காமாட்சியும் பாபுவும் பணியாற்றி வருகின்றனர். "கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டிருப்பதால் மக்களின் குரல்களை பிரதிபலிப்பதில் அவர்கள் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டனர். மக்களின் கருத்துகளும் குரல்களும் கேட்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணம் அளவுக்கு அதிகமாக வீணடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம்", என்று கூறுகிறார் பாபு.
தேர்தல் அறிக்கை
"பெசன்ட் நகரை கருத்தில் கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்களை இணைத்துள்ளோம்", என்று கூறுகிறார் பாபு.
"எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் பெசன்ட் நகர் கடற்கரையை குப்பை சேராமல், சுத்தமாக பராமரிக்க உதவுவோம்.
மீன் சந்தையை சுகாதாரமான விற்பனை மையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மாறும். சுற்றுச்சூழலுக்கு மாசுபடாத வகையில், மக்களுக்கான கடல் உணவுகளை தூய்மையான முறையில் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகள் மற்றும் வழித்தடங்கள் உருவாக்கப்படும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த பகுதியில் பல மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. அவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் தேவையான நடவடிக்கைகளை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அனைத்து மக்களையும் நாங்கள் வீடு வீடாக சென்று சந்தித்து வருகிறோம். பல கட்சியினர் பேரணிகளை நடத்துகின்றனர். பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் அது மக்களுக்கு சற்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. எனவே வாக்களிக்க மறுக்கும் 80% மக்களில் 30% மக்கள் எங்களின் பிரச்சாரங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் வாக்களிக்க வந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்", என்றும் பாபு கூறினார்.
"நிறைய இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். தோல்வி, வெற்றி என்பது இரண்டாம் பட்சம். போட்டியிடும் அனைவரும் தோல்வி அடையப் போவதில்லை. மாற்றங்களைக் கொண்டு வர இளைஞர்கள் நீங்கள் முன் வர வேண்டும்", என்று பேசுகிறார் காமாட்சி.
டெல்லியில் சில காலம் வாழ்ந்த அவர், பிறகு சென்னையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். 94 வயதில் தேர்தலில் போட்டியிட எப்படி உங்களுக்கு உத்வேகம் கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய போது, ”நாம் பிறந்த அதே நாளில் நமக்கு வயது ஏறத் துவங்குகிறது. அனைவருக்கும் தான் வயசாகிறது. வயது ஒரு விஷயமே இல்லை. மக்களுக்கு நற்பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நான் இந்த நாள் வரை ஆரோக்கியமாக இருப்பதே மக்கள் நலப்பணியாற்ற வேண்டும் என்பதற்காக தான். என்னுடைய வயதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய முன்னெடுப்புகள் அனைத்துமே சவால் நிறைந்தவையாகவே இருக்கிறது. ஆனால் ஒரு போதும் நான் சளைத்துவிடுவதில்லை.” என்று உத்வேகம் தருகிறார் காமாட்சி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.