தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திராவிட கட்சிகள் திருச்சியை மையம் வைத்து முதல் பிரச்சார கூட்டத்தை இன்று தொடங்குகிறது.
திராவிட கோட்டையாக விளங்கும் திருச்சி மலைக்கோட்டை தொகுதியிலிருந்து தங்களது பிரசாரத்தைத் தொடங்குவதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் பிரசாரத்தை மார்ச் 22ஆம் தேதி, இன்று மாலை திருச்சியிலிருந்து தொடங்குகிறார்.
அதுபோலவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 24ஆம் தேதி திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்,
இந்தநிலையில், அமைச்சர் கே.என். நேரு, சிறுகனூரில் நடைபெறவிருக்கும் திமுகவின் முதல் பிரசாரப் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகளை கண்காணித்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; இந்தப் பொதுக்கூட்டத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தப் பொதுக்கூட்ட மேடையை அலங்கரிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவின் முதல் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவையும் ஆதரித்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். திமுக பிரச்சார கூட்ட மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. 40-க்கும் 40 என்ற முகப்பில் மேடை முழுவதும் 40க்கு 40 அலங்கரிக்கின்றது. இந்த பிரசார கூட்டம் திமுகவின் வெற்றிக்கூட்டமாகும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு திருச்சி அல்லது தஞ்சாவூரில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை ( மார்ச் 23 ) திருவாரூர் செல்லும் முதல்வர், கொரடாச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சி வரும் முதல்வர், விமானம் மூலம் சென்னை செல்கிறார் என்றார்.
முன்னதாக, திருச்சி வருவது குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில், இது நிறைவடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு இன்று காலை திமுக வேட்பாளர்களிலேயே முதல் ஆளாக தனது வேட்பு மனு தாக்கலை பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டு தனது பிரசார பயணத்தை துவக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.