இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஆரணி மக்களவைத் தொகுதி குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் ஆரணி 12-வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பின் போது வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக உருவாக்கப்பட்டது தான் ஆரணி. ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. பட்டு சேலை, பொன்னி அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்றது. கைலாசநாதர் கோயில், செஞ்சி கோட்டை, அரண்மனை எனப் பல்வேறு தனிச் சிறப்புகள் இந்த தொகுதிக்கு உண்டு. 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆரணி மக்களவைத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை காங்கிரஸ், ஒரு முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம். கே.விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இதில் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க வேட்பாளரான வி. ஏழுமலையை விட 54% வாக்குகள் பெற்று (2,30,806 வாக்குகள்) வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறிப்பிடத்தகுந்த வகையில் இந்த தேர்தலில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க வேட்பாளர் 3-ம் இடம் பிடித்தார்.
தற்போதுள்ள எம்.பி விஷ்ணு பிரசாத் மக்களவையில் 78% வருகைப் பதிவு செய்துள்ளார். மக்களவையில் 254 கேள்விகளை எழுப்பி உள்ளார். விஷ்ணு பிரசாத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றினாலும் சில முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக மக்கள் கூறினர்.
15 ஆண்டுகாலம் ஆரணி மக்கள் கேட்டு வந்த கூட்டேரிப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. செஞ்சி கோட்டை பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்தினார். திண்டிவனம்-நகரி உள்பட நீண்ட காலமாக மக்கள் கேட்டு வந்த ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கி நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தார்.
மத்திய அரசின் மருத்துவ திட்டங்களைப் பெற உடனடி நடவடிக்கை. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிக் கூடம், சமுதாயக் கூடம் கட்டியுள்ளார். அதே சமயம் சில முக்கிய வாக்குறுதிகளை எம்.பி நிறைவேற்றவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.
ஆரணியில் பட்டுப் பங்கா அமைக்கப்படவில்லை. போளூரில் அரசு சிற்பக் கலைக் கல்லூரி அமைப்பதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை உள்ளிட்டவற்றை மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இம்முறையும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இம்முறையும் ஆரணி தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டாலும் விஷ்ணு பிரசாத் மீண்டும் போட்டியிடுவாரா? எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மறுபுறம் அ.தி.மு.க என்ன செய்யும்? அ.தி.மு.கவே நேரடியாக போட்டியிடுமா? அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மற்ற கட்சிகள் வியூகம் என்ன என்பதையும் இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.