5 மொழி பேசும் மக்கள்; 1 லட்சம் ஏக்கரில் மா சாகுபடி, ரோஜா, சாமந்தி மலர்கள் சாகுபடி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி... தோட்டக்கலை மாவட்டம் என்ற அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து இன்று பார்ப்போம். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் கிருஷ்ணகிரி 9-வது தொகுதியாக உள்ளது. 2004-ல் கிருஷ்ணகிரி தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக உதயமானது. கருப்பு வைரம் என அழைக்கப்படும் கிரானைட் இங்கு அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது. வேளாண்மை, கிரானைட் வெட்டுதல் போன்றவை மக்களின் வாழ்வாதாராமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 5 மொழி பேசும் மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 8 முறை காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. 5 முறை தி.மு.க , 4 முறை அ.தி.மு.க, 1 முறை த.மா.கா வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஏ. செல்லகுமார் அ.தி.மு.கவின் மூத்த தலைவர் கே. பி. முனுசாமியை 1,56,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செல்லகுமார் 6,11,298 (52.60%) வாக்குகள் பெற்றார். அ.தி.மு.கவின் முனுசாமி 39.14% அதாவது, (4,54,533) வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் நாம். தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்தது.
செல்லகுமார் மக்களவையில் 65% வருகைப் பதிவு செய்துள்ளார். 27 விவாதங்களில் பங்கேற்று 195 கேள்விகளை எழுப்பியுள்ளார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செல்லகுமார் நிறைவேற்றியதாகவே சொல்லப்படுகிறது. கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரைசாலை திட்டம் நிறைவேற்றம், ஒசூர்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை, கால்வாய் இணைப்பு திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது போன்றவற்றை நிறைவேற்றியதாக மக்கள் கூறியுள்ளனர்.
அதே சமயம் ஒசூர்- ஜோலார்பேட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி நிலுவையில் உள்ளதாகவும் மக்கள் கூறினர். இந்நிலையில் செல்லகுமார் மீண்டும் இத் தொகுதியில் போட்டியிட கட்சியினரே சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் இத்தொகுதி ஒதுக்கப்படுமா என்பது குறித்தும் தகவல் இல்லை. எனவே இதற்கான பதில்களுக்கு இன்னும் ஒருசில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
மறுபுறம், அ.தி.மு.க இம்முறை யாரை களமிறக்கும் என பார்க்க வேண்டும். கடந்த முறை (2014) தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. எனவே அ.தி.மு.க இழந்த தொகுதியை மீட்க கடும் சவாலை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மற்ற கட்சியின் வியூகம் குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“