இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாமக்கல் தொகுதி நிலவரம் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் நாமக்கல் 16-வது தொகுதி ஆகும். நாமக்கல் மாவட்டம் தென்னிந்தியாவில் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியில் முதலிடம் பெற்றது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் இங்கு பிரதானமாக செய்யப்படுகிறது. லாரி பாடிகட்டுதல், பால் பண்னை, நெசவு, ஜவ்வரிசி உற்பத்தி என பல்வேறு தொழில்களும் கோலோச்சும் இடமாக உள்ளது.
2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதி நீக்கப்பட்டு நாமக்கல் தொகுதி உருவாக்கப்பட்டது. பல்வேறு தொழில்கள் இங்கு செய்யப்பட்டாலும் நெல், கரும்பு, சோளம், கம்பு, பருத்தி, உள்ளிட்ட வேளாண் தொழிலே 70% மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது நாமக்கல் மக்களவைத் தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
நாமக்கல் மக்களவைத் தொகுதி 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை தி.மு.க, 1 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம் (கொ.ம.தே.க) சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் சுமார் 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2-ம் இடம் பிடித்த அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பன் 3,61,142 வாக்குகள் பெற்றார். இங்கு நாம் தமிழர் கட்சியின் பாஸ்கர் 3.4% வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.
ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டார். தற்போது எம்.பியாக உள்ள சின்ராஜ்
பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அதோடு எளிமையாக பழக கூடியவர். கையூட்டுப் பெறாத நேர்மையான அரசியல்வாதி என்றும் மக்கள் கூறுகின்றனர்.
மக்களவையில் 72% வருகை பதிவையும், 12 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். நாமக்கலுக்கு கூடுதல் ரயில் இயக்கம், மக்காச் சோளம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் உள்பட 263கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
ராசிபுரம், புதுச்சத்திரம், ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதிகளில் மேம்பாலம் கட்டிகொடுத்துள்ளார். பள்ளிகளுக்கு அடிப்படை வசதி, உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தந்துள்ளார். பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் மனு அனுப்பினாலும் அதற்கு சின்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மக்கள் கூறினர். எனினும் நாமக்கலின் பிரதான தொழிலான முட்டை தொழிலை மேம்படுத்த குளிர்பதன கிடங்கு அமைத்து தரவில்லை என மக்கள் விமர்சனம் செய்துள்ளனர். தூசூர் ஏரியில் கழிவுநீர் கலந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவில்லை, குடிநீர் தேவைகளுக்கு இணைப்பு திட்டங்களை செயல்படுத்தவில்லை எனவும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
2014 தேர்தலில் அ.தி.மு.கவின் பி. ஆர். சுந்தரம் இங்கு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை இங்கு வெற்றி பெற இருகட்சிகளும் கடுமையான சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல்லில் இம்முறையும் கொ.ம.தே.க போட்டியிடும் எனக் கூறப்பட்டுள்ளது. மீண்டும் சின்ராஜ் போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.