இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்ப்போம். திருப்பூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பின்னலாடை உற்பத்தி தான். பனியன், டீ-சர்ட், டிராக் பேண்ட் எனப் பல்வேறு ரக ஆடைகள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.40,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டும் டாலர் நகரமாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஏராளமான வடமாநிலத்தவர்களும் இங்கு பணிபுரிகின்றனர். பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு, குறு, நடுத்தர வர்த்தக தொழில்களும் இங்கு அதிகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், திருப்பூர் தொழில் வளத்திற்கு மக்கள் பிரநிதிகள் என்ன செய்தார்கள், தொகுதி நிலவரம், கடந்த வந்த பாதை குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் திருப்பூர் மக்களவைத் தொகுதி 18-வது தொகுதி ஆகும். இத்தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளை கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் திருப்பூர் மக்களவைத் தொகுதி 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.
இந்த தொகுதியில் தற்போது தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மூத்த தலைவரான கே.சுப்பராயன் எம்.பியாக இருந்து வருகிறார். அ.தி.மு.கவிடம் இருந்து கடந்த தேர்தலில் தொகுதியை கைப்பற்றினார். 2019 தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளரான
ஆனந்தனை விட 93,368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சுப்பராயன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் நீண்ட பயண அனுபவம் கொண்டவர். இந்த தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐ இடம் பெற்றுள்ளது. 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த தொகுதி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
தொழிலாளர்கள் அதிகமுள்ள திருப்பூர் மாநகரில் சுப்பராயனுக்கு தனி செல்வாக்கு உள்ளதாலும், மக்களிடையே எளிமையாக பழக கூடியவர் என்பதாலும் சி.பி.ஐ மீண்டும் இங்கு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சுப்பராயன் மீண்டும் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்குமா எனத் தெரியவில்லை. அவர் 75 வயதை கடந்த நிலையில் கட்சி விதிகளின் படி மீண்டும் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. கட்சியும் இதுகுறித்து சலசலப்பு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய நபருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் கட்சிக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் மூத்த தலைவைர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர், தொழிலாளர்களிடம் எளிமையாக பழக கூடியவர் என்பதால் தி.மு.க கூட்டணியில் சி.பி.ஐக்கு மீண்டும் திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் அவரே போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அதேநேரம் அ.தி.மு.க இங்கு 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 2009, 2014 ஆகிய 2 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க இந்த தொகுதியை மீண்டும் தன்வசமாக கடுமையான போட்டியை கொடுக்கும். மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளரை களமிறக்க முயற்சி செய்யும். மறுபுறம் பா.ஜ.க திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. அண்மையில் பிரதமர் மோடி திருப்பூர் அருகே பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். கொங்கு பகுதி மக்களின் வாக்குகளை பெற பா.ஜ.க முயற்சி செய்கிறது.
அதேசமயம் மற்ற கட்சிகள் நா.த.க, அ.ம.மு.க உள்ளிட்டவைகளும் வாக்கு வங்கியை உயர்த்த கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“