இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் விழுப்புரம் 13-வது மக்களவைத் தொகுதியாகும். இது 2008-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியில் , பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி உள்ளது. விழுப்புரம் மக்களவைத் தொகுதி திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் எம்.பியாக உள்ளார்.
விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரை விவசாயம் சார்ந்த தொழில்கள் 80% மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. நெல், கரும்பு, கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வேளாண்மை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கிரானைட் கற்கள் வெட்டப்படுவது உள்ளிட்ட தொழிற்கள் செய்யப்படுகிறது. விழுப்புரத்தின் பழமையான கல்மரங்கள், பாறை ஓவியங்கள் ஆகியவை தொகுதின் தனிச் சிறப்பாகும்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. 2 முறை அ.தி.மு.கவும், ஒரு முறை வி.சி.கவும் (தி.மு.க கூட்டணி) வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிட்டு பா.ம.க வேட்பாளர்
(அ.தி.மு.க கூட்டணி) வடிவேல் இராவணனை விட 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வி.சி.க ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.
ரவிக்குமார் எம்.பியை பொறுத்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றினாலும் சில முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக மக்கள் கூறினர். இதற்கு முன்பிருந்த எம்.பியை விட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக ரவிக்குமார் இருப்பது மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுத்துள்ளார். 200-க்கும் மேற்பட்டோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான உதவி தொகையை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். தொகுதி சார்ந்த செயல்பாடுகள்
மட்டுமின்றி மாநில நலன், மத்திய அரசுக்கு வலியுறுத்தல் எனப் பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளார்.
அதே சமயம், இளைஞர்கள் வேலைவாய்புக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளதால் இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.
விவசாயம் சார்ந்த பண்ணைகள், தேஜஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் வி.சி.க, தி.மு.க கூட்டணியில் உள்ளது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் வி.சி.கவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இம்முறை தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.க சவாலாக இருக்கும். அ.தி.மு.கவும் பா.ம.க உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.