/indian-express-tamil/media/media_files/lFQb18oj0rigCNvkC9Ac.jpg)
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு விநியோகம் என தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 20-ஆவது தொகுதியாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உள்ளது. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு, இதுவரை வெற்றி பெற்ற கட்சி உள்ளிட்ட தகவல்களை இங்கு பார்ப்போம்.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பல்லடம்
சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகியவை ஆகும்.
கோயம்புத்தூர் கொங்கு மண்டலத்தை உள்ளடங்கிய முக்கிய பகுதியாகும். தொழில்துறையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளது. தொழில், கல்வி, அரசியல் என அனைத்திலும் முக்கிய இடம்பெறுகிறது. கோவை சட்டமன்றத் தேர்தலுக்கு வேறுபட்டாலும், நாடாளுமன்றம் என்று வருகையில் இடதுசாரிகளின் கோட்டையாகவே உள்ளது. 1957 முதல் இதுவரை நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மட்டுமே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. 5 முறை காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க தலா ஒரு முறை, பா.ஜ.க 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய 2 கட்சிகளும் அதிக முறை இங்கு வெற்றி பெற்றுள்ளன.
கடந்த முறை 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க கூட்டணியில் நின்ற பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் நடராஜன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் மகேந்திரன் போட்டியிட்டார். இவர் 1,45,104 வாக்குகள் பெற்ற 3-ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில், இந்த முறையும் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த முறையும் இங்கு சி.பி.எம் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாகவும் பேச்சுகள் வருகிறது. ம.நீ.ம இணைந்தால் இங்கு கமல்ஹாசனே போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட கமல்ஹாசன் கோவை தெற்கில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தி.மு.க கூட்டணியில் இணைந்தால் அதிக வாக்குகள் பெற முடியும்.
மக்களவைத் தேர்தலிலும் கூட மகேந்திரனுக்கு 11.6% வாக்குகள் கிடைத்தது. எனவே, தி.மு.க கூட்டணியில் ம.நீ.ம வந்தால் கோவை தொகுதியை கேட்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் இந்த முறை பி.ஆர்.நடராஜனுக்கு வாய்ப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் இரண்டு முறை எம்.பி.யாக இருந்து விட்டதால், கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.
எனினும் இன்னும் ஒருவார காலத்திற்குள் யார், யாருடன் கூட்டணியில் வைக்கிறார்கள் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறது என்று தெரிந்துவிடும். அதுவரை சற்று பொறுத்திருக்க வேண்டும்.
மறுபுறம் அ.தி.மு.கவிற்கு கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில்
பா.ஜ.க சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். 3,92,007 பெற்று 2-ம் இடம் பிடித்தார். இந்த முறை அதிமுக, பா.ஜ.க தனித் தனியாக போட்டியிட உள்ளது. அதிமுகவை பொருத்தவரை தற்போது கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி மட்டுமே இருக்கிறது. எனவே, கோவை மண்டலத்தில் வலுவாக உள்ள அதிமுகவே, கோவை மக்களவை தொகுதியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது அம்மா” வெளியீட்டாளர் சந்திரசேகரன் இந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது. அ.தி.மு.க கடந்தாண்டு
பா.ஜ.க உடன் கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் இரண்டு கட்சிகளும் தனித் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி களம் காண உள்ளதால் இங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதே சமயம் கோவை பா.ஜ.க அதிக கவனம் செலுத்தும், செல்வாக்கு பெறும் மாவட்டமாக உள்ளது. பா.ஜ.க சி.பி ராதாகிருஷ்ணன் இங்கு 2 முறை வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.கவின் வானதி சீனிவாசன் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். எனவே பா.ஜ.கவிற்கு இந்த வாக்குகள் உள்ளதால் இங்கு வெற்றி பெற கடுமையான போட்டியை கொடுக்கும்.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை எப்போதும் தனித் போட்டியிடுவதால் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கலாமணி என்ற பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் தேர்தல் பணிகளையும் தொடங்கி உள்ளார். கடந்த தேர்தலில் இங்க நா.த.கட்சிக்கு 4.84% சதவீதம் வாக்குகள் கிடைத்தது. கல்யாணசுந்தரம் என்பவர் வேட்பாளராக களம் கண்டார். மற்ற கட்சிகள் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 2019 தேர்தலில் அ.ம.மு.க இங்கு 23,190 வாக்குகள் பெற்று 5-ம் இடம் பிடித்தது. இநத முறை ஓ.பி.எஸ் உடன் இணைந்து அ.ம.மு.க போட்டியிடுமா இல்லை என்ன முடிவு என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஒட்டுமொத்தமாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி நிலவரம் இதுவாக உள்ளது. கூட்டணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும், அ.தி.மு.க, பா.ஜ.கவில் யார் களமிறக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.