இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மக்களவைத் தொகுதி குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் திருவள்ளூர் முதலாவது தொகுதி ஆகும்.
2008-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னர் 1951 முதல் 1962 வரை 3 தேர்தல்கள் நடைபெற்றது. இத் தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும். இந்த தொகுதி தற்போது வரை மொத்தமாக 6 தேர்தல்களை சந்தித்துள்ளது.
திருவள்ளூர் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். அதனால் வெளிமாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்களும் இங்கு அதிகம் இருப்பர். ஆந்திர மாநிலத்தின் எல்லையை ஒட்டி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் 4 முறை காங்கிரஸ், 2 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் கே. ஜெயக்குமார், அ.தி.மு.க வேட்பாளரான பொ. வேணுகோபாலை விட 3,56,955 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். ஜெயக்குமார் 7,67,29 வாக்குகளும், வேணுகோபால் 4,10,337 வாக்குகளும் பெற்றனர். கமலின் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த எம். லோகரெங்கன் 5.24% வாக்குகள் பெற்றார்.
ஜெயக்குமார் தொகுதி மக்களுக்கு சில முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவே கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திருப்பாலைவனம் - மீஞ்சூர் சாலை பணிக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தார். எம்.பி நிதியில் இருந்து அடிப்படை வசதிகளை மேற்கொண்டார். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பட செய்தார். இது மக்களிடையே நற்பெயர் கொடுத்தாலும் சில வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளது.
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை இல்லை. நெடுஞ்சாலைப் பணிகள் என முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் இம்முறையும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்தமுறை இந்த தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும்? காங்கிரஸிக்கு ஒதுக்கப்பட்டாலும் மீண்டும் ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மறுபுறம் அ.தி.மு.க இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற கடும் சவாலை கொடுக்கும். இன்னும் ஓரிரு வாரங்களில், வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என தேர்தல் களம் சூடுபிடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“