சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருட்கள் மற்றும் சேவை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்குந்துகள் போக்குவரத்து இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தீப ஒளித் திருநாள் நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவது வணிகத்தைக் கடுமையாக பாதிக்கும். இந்த போராட்டத்தைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பதற்கு பதிலாக மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும், சரக்குந்தை விற்கும் போதும் வாங்கும் போதும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே சரக்குந்து உரிமையாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் 93 லட்சம் சரக்குந்துகள் இன்று முதல் ஓடவில்லை.
தீபாவளி விலைவாசி எகிறுமா? இன்றும், நாளையும் லாரிகள் ஸ்டிரைக்!
தமிழ்நாட்டில் 4.50 லட்சம் சரக்குந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நாளை வரை இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தால் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வணிகம் பாதிக்கப்படும். தீபஒளித் திருநாளுக்கு இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருப்பதால் தீப ஒளித் திருநாளுக்குத் தேவையான ஆடைகள், உணவுப் பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் வணிக இழப்பு, விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
சரக்குந்து உரிமையாளர்கள் தங்களின் போராட்டம் குறித்த அறிவிப்பை பல வாரங்களுக்கு முன்பே வெளியிட்டு விட்டனர். தீபஒளித் திருநாள் நேரத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள்தான் அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இரு நாட்கள் மட்டுமே வேலை நிறுத்தம் நடத்தப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசு கருதுவதாகவும், அதனால்தான் பேச்சு நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமான அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவை எளிதில் நிறைவேற்றக் கூடியவைதான். சரக்குந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசுவதன் மூலம்தான் இருதரப்பும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. இந்த சிக்கல் இரு நாட்களில் தீர்ந்து விடும் என்று அரசு நினைத்தால் அதற்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.
இந்தக் கோரிக்கைகளை இப்போராட்டத்துடன் சரக்குந்து உரிமையாளர்கள் கைவிடப்போவதில்லை. இப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இதே கோரிக்கைகளை முன்வைத்து ஆங்கிலப் புத்தாண்டு அல்லது தைத் திங்களுக்கு முன்பாக பெரிய அளவில் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டால் அது மிக மோசமான வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றன. பல சுங்கச்சாவடிகள் அவற்றிற்காக செய்யப்பட்ட முதலீட்டை எடுத்த பிறகும் முழுமையான சுங்கக்கட்டணத்தை வசூலிக்கின்றன. அதேபோல், தினமும் எரிபொருள் விலையை மாற்றியமைப்பது குழப்பங்களை ஏற்படுத்தும். ஒரு சரக்குந்தை முதல் முறை வாங்கும்போது அதற்கு 28% வரி செலுத்துவது நியாயமானதுதான்.
ஆனால், ஒவ்வொருமுறை அதை விற்கும் போதும் வாங்கும் போதும் வரி செலுத்துவது என்பது பகல் கொள்ளையாக அமையும். சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர்களுடன் பேச்சு நடத்தி போராட்டத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.