சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு: எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைய ஒப்பந்த காலத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. பண்டிகைக் காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இதன் மூலம் நீங்கியுள்ளது

எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைய ஒப்பந்த காலத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. பண்டிகைக் காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இதன் மூலம் நீங்கியுள்ளது

author-image
abhisudha
New Update
LPG tanker lorry strike withdrawn Chennai High Court

LPG tanker lorry strike withdrawn

தென் மண்டலத்தில் சமையல் எரிவாயுவை (LPG) விநியோகிக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைய ஒப்பந்த காலத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. பண்டிகைக் காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இதன் மூலம் நீங்கியுள்ளது.
 
வேலைநிறுத்தத்திற்கான காரணம் என்ன?

Advertisment

இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கான டேங்கர் லாரிகளின் பழைய ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், 2025-30 ஆண்டுக்கான புதிய ஒப்பந்தங்கள் வழங்க டெண்டர் கோரப்பட்டது.

தென் மண்டலத்தில் இயங்கும் 3,500 லாரிகளுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், சுமார் 2,800 லாரிகளுக்கு மட்டுமே அங்கீகார கடிதம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 700 லாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும், பெரும் தொகையை முதலீடு செய்து வாங்கப்பட்ட டேங்கர் லாரிகளை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற முடியாததைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கக் கோரியும், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அக்டோபர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு மற்றும் தீர்ப்பு:

இந்த வேலைநிறுத்தம் காரணமாகப் பொதுமக்களுக்குச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறி, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குத் தொடர்ந்தன.

Advertisment
Advertisements

நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாததால், தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்கத் தயாராக இருக்கிறோம்; அதற்குள் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த உத்தரவை டேங்கர் லாரி சங்கங்களும் ஏற்றுக்கொண்டன. இதை ஏற்ற நீதிபதி, ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று டேங்கர் லாரி சங்கங்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் விரைவில் சீரடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: