ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால், இன்றும் லக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
சசிகலா, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என மொத்தம் 1800 பேர் மேற்கொண்ட இந்த சோதனைதான், இந்தியாவிலேயே மிகப்பெரிய ரெய்டு என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் நேற்றே சோதனை முடிந்துவிட்ட நிலையில், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அதில், ஜாஸ் சினிமா அலுவலகமும் ஒன்று.
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள 11 லக்ஸ் தியேட்டர்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் அலுவலகம், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இங்குதான் 11 தியேட்டர்களுக்கான கணக்கு, வழக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அத்துடன், ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான கால் செண்டர் வசதியும் இங்குதான் உள்ளது.
வருமான வரித்துறையின் சோதனையை முன்னிட்டு, நேற்று லக்ஸ் தியேட்டர்களில் எந்தப் படமும் திரையிடப்படவில்லை. இரண்டாவது நாளாக சோதனை தொடர்வதால், இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக, சினிமா காட்சி ரத்தானால், ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு தானாகவே அவர்கள் அக்கவுண்டுக்கு சில நாட்களில் பணம் திரும்ப சென்றுவிடும். ஆனால், சோதனையை முன்னிட்டு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதால், ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.