Advertisment

கவர்னர் மீது குற்றம்சாட்டி, அவரிடமே மனு கொடுத்த ஸ்டாலின்! கடிதம் முழு விவரம்

தமிழக கவர்னரிடம் கொடுத்த மனுவில், அவர் மீதே புகார் சுமத்தியிருக்கிறார் ஸ்டாலின். ‘கவர்னரின் செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக’ குறிப்பிட்டிருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
m.k.stalin, dmk, governor vidyasagar rao, tamilnadu legislative assembly, speaker dhanapal, cm edappadi palaniswami, m.k.stalin accuses governor vidyasagar rao

தமிழக கவர்னரிடம் கொடுத்த மனுவில், அவர் மீதே குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் ஸ்டாலின். ‘கவர்னரின் செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக’  ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisment

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை, செப்டம்பர் 10-ம் தேதி (நேற்று) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் சந்தித்தார். ஏற்கனவே ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய கடிதம், ஆகஸ்ட் 26-ம் தேதி துரைமுருகன் தலைமையில் வழங்கப்பட்ட ஸ்டாலினின் கடிதம், செப்டம்பர் 6-ம் தேதி டிடிவி.தினகரன் அணியின் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆளுனரிடம் வழங்கிய கடிதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தனது கடிதத்தை மீண்டும் வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடியை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ஆளும் அஇஅதிமுக கட்சியை சார்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை நேரடியாக சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்து முதலமைச்சர் தலைமையிலான அரசு மீது தங்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.‬

‪ ‬

‪ஏற்கனவே திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மேலும், சட்டப்பேரவையில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போதுள்ள அஇஅதிமுக அரசு, சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது.

ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது (திமுக: 89; காங்கிரஸ்: 8; ஐயூஎம்எல்: 1; மற்றும் அதிருப்தி அஇஅதிமுக எம்.எல்.ஏ..க்கள்: 21). எனவே, தற்போதைய முதல்வர் சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.‬

‪ ‬

‪ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற, அரசுக்கு மட்டுமே நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளதோடு, அதுவே நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகவும் இதுவரை நிலைநாட்டப் பட்டுள்ளது.‬

‪ ‬

‪சட்டத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பேன், காப்பாற்றுவேன் என தாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளீர்கள். ஆனால், இந்த விவகாரத்தில், தங்களுடைய நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சட்டங்களுக்கும் எதிரானதாகவும் மாறானதாகவும் அமைந்துள்ளது.‬

‪ ‬

‪எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் (reported in 1993 (3) SCC 1) மாண்பமை உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டிய மேற்கொள்கள் சிலவற்றை தங்களது கவனத்திற்கு கொண்டு வர நான் விரும்புகிறேன். ‘அமைச்சரவை நம்பிக்கையை இழந்துவிட்டது என கருதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், அமைச்சரவையின் பலத்தை நிரூபிக்க சட்டப்பேரவையில் தான் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’, ‘அமைச்சரவையின் பெரும்பான்மையை தனி நபர்களினுடைய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாது, அவர்கள் குடியரசுத் தலைவராகவோ அல்லது ஆளுநராகவோ இருந்தாலும் கூட.’

‪ ‬

‪ ‘எப்போதெல்லாம் அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டது என்று சந்தேகம் எழுகிறதோ, அதன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய ஒரே இடம் சட்டமன்றம்தான். அதற்கு விதிவிலக்கு ஏற்படுத்தக்கூடிய ஒரே தருணம் இருக்கிறது. அது எப்போது எனில், ‘ஏதாவது வன்முறை சூழல்களுக்கு இந்த நிலையில் அவையில் சுதந்திர மான வாக்கெடுப்பு நடத்த முடியாது என ஆளுநர் ஒரு முடிவிற்கு வந்து - அதனை தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டும்’‬

‪ ‬

‪ ‘அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை அல்லது அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது எனும் உண்மைகள் தெளிவாக தெரியும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்கக்கூடாது. அதற்கு பதில் அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்’

‪ ‬

‪ ‘அடுத்ததாக "நபாம் ரெபியா & பமாங் ஃபெலிக்ஸ் வெர்சஸ் துணை சபாநாயகர்" என்ற அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை வழக்கில் (Nabam Rebia & Bamang Felix v. Dy. Speaker, Arunachal Pradesh Legislative Assembly, (2016) 8 SCC 1 : 2016 SCC OnLine SC 694) மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்களது கவனத்துக்கு கொண்டுவர நான் விரும்புகிறேன். ‬‪ஆட்சியில் உள்ள அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நம்புவதற்கான காரணங்கள் இருக்குமாயின், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை விவகாரத்திற்கு முடிவு காணும் நடவடிக்கைகளை எடுக்க ஆளுநருக்கு முழு உரிமையுண்டு.

‪மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படியும் ஜனநாயக அடிப்படையின்படி, உடனடியாக எந்தவித தாமதமும் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. இந்த பெரும்பான்மையில்லாத அரசு இனியும் தொடர தாங்கள் அனுமதித்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கங்களுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கருத்துகளுக்கும், மாண்பமை உச்சநீதிமன்றம் இது போன்ற விஷயங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.

பெரும்பான்மையில்லாத அரசு தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை தோற்கடிக்க வழிவகுக்கும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் ஏற்படும் சிறு தாமதம் கூட, தமிழகத்தில் ‘குதிரை பேர’த்தை ஊக்குவிப்பதோடு, முறையற்ற அரசியல் நடவடிக்கைகள் மாநிலத்தில் நடைபெற வழிவகுத்து விடும்.‬

‪ ‬

‪இதுவரையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் தவிர்ப்பது, தங்களுடைய செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பதைதான் குறிப்பிடுகிறது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.‬

‪ ‬

‪எனவே, தற்போதுள்ள அரசியலமைப்பு நெருக்கடியான சூழ்நிலையில் மாண்புமிகு ஆளுநர் உடனடியாக தலையிட்டு, இனியும் எவ்வித தாமதமுமின்றி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் மீண்டும் நிலைறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.‬

இவ்வாறு கூறியிருக்கிறார்.

Dmk M K Stalin Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment